மனித வாழ்வில் மனநிறைவோடு வாழ மிகவும் அத்தியாவசியமான கிரகம் சுக்கிரன். இந்தக் கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நீசமடைந்து பலம் குன்றி இருந்தாலோ அல்லது சுக்கிரன் இருக்கும் இடத்தைப் பொறுத்து ஆதிபத்ய தோஷம் பெற்று இருந்தாலோ, அவற்றுக்கெல்லாம் பரிகாரத் தலமாக அமைந்துள்ளது திருகஞ்சனூர் என்ற இத்தலம். சுக்கிரனுக்கு வெண் பட்டாடை சாற்றி, வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனி பகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை தரிசிக்கத்தக்கது. நடராசர் மூலத்திருமேனியில், சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்துக்கும் முக்தி மண்டபம் என்று பெயர். கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோவில் இறைவனை திருமால், பிரம்மன், சந்திரன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக வரலாறு உள்ளது. இறைவன், பிரம்ம தேவருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சந்நிதியில் இறைவி காட்சி அளிக்கிறார்..
பக்தர் ஒருவர் இவ்வூரைச் சேர்ந்தவர். சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகளுக்கு சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்று சொல்லி அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.
முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும், அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்துவிட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தனது வழக்கமாகக் கொண்டவர்.
வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே, பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம், இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில், அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது, அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது.
இறைவன் : அக்னீச்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
விருட்சம் : புரச மரம்
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
நவக்கிரகத் தலம் : சுக்ரன்
நிறம் : வெண்மை.
வாகனம் : முதலை
தான்யம் : மொச்சை
உணவு : மொச்சைப் பொடி கலந்த சாதம்
வச்திரம் (துணி) : வெள்ளைத் துணி
மலர் : வெண்தாமரை
இரத்தினம் : வைரம்
இத்தலத்து தலவிருட்சத்தை, ஒரு மண்டல காலம், பதினாறு முறை சுற்றி வந்து வழிபட, கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.