நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும் நவக்கிரகங்களுடன் தொடர்புடையவை எனக் கருதி வழிபடப்பட்டு வருகின்றன. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவக்கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகின்றன. சோழ நாட்டில் அமைந்துள்ள தலங்களுக்கு ஒப்பாக இந்த பாண்டிய நாட்டு நவதிருப்பதி தலங்கள் நவக்கிரக தலங்களாகப் போற்றப்படுகின்றன. இந்த தலங்கள் அனைத்தும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் தலைமைப் பதவி வகிக்கும் சூரியன் மகாவிஷ்ணுவே ஆவார். அவரை சூரிய நாராயணன் என்றும் கூறுகின்றனர். ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனி பகவானைத் தவிர மற்ற கோள்கள் எல்லாம் நெற்றியில் திருமண்-நாமம்- அணிந்திருப்பதிலிருந்து நவக்கிரகங்கள் வைணவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதை உணரலாம்.
திருமாலின் பத்து அவதாரங்களும் அவற்றுடன் தொடர்புடைய நவகோள்களும் பின் வருமாறு:
- ராமர் அவதாரம்: சூரியன்
- கிருஷ்ணர் அவதாரம்: சந்திரன்
- நரசிம்மர் அவதாரம்: செவ்வாய்
- கல்கி அவதாரம்: புதன்
- வாமன அவதாரம்: குரு
- பரசுராம அவதாரம்: சுக்கிரன்
- கூர்ம அவதாரம்: சனி
- மச்ச அவதாரம்: கேது
- பலராமர் அவதாரம்: குளிகன்
- வராகர் அவதாரம்:ராகு.
நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் பின்வருமாறு:
1. சூரியன்: திருவைகுண்டம்
2. சந்திரன்: வரகுணமங்கை
3. செவ்வாய்: திருக்கோளூர்
4. புதன்: திருப்புளியங்குடி
5. குரு: ஆழ்வார்திருநகரி
6. சுக்கிரன்: தென்திருப்பேரை
7. சனி: பெருங்குளம்
8. ராகு: இரட்டை திருப்பதி (தேவர்பிரான்)
9. கேது:இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனா)
நவதிருப்பதி ஸ்தலங்கள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவை ஆகும். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் நலம் தரும் ஆலயங்கள் வரிசையில் நாம் இந்த வாரம் தரிசிக்கவிருப்பது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமான அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் ஆகும்.
வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.
திருமாலிடம் பிரம்மன் தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்தில் இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க வேண்டும் என வேண்ட அவரும் சம்மதித்தார். மூல விக்கரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன் கமண்டத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து கலசத்தை நதிக்கரையில் பிரதிஷ்டை செய்தல் தீர்த்தம் கலசதீர்த்தம் எனப்படுகிறது.
கால தூஷகன் என்னும் திருடன் ஒருவன் இப்பெருமானை வழிபட்டு திருடச் செல்வானாம். திருடிய செல்வத்தில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாகவும் தருவான். இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபடும் பொழுது கால தூஷகன் வைகுண்ட நாதனிடம் சரண் அடைந்து தன்னை காக்குமாறு வேண்ட பெருமாளே காலதூஷகன் வேடத்தில் எதிரில் வர, காலதூஷகனை அரசன் பார்த்த போது தன் சுயரூபத்தை காட்டியருள, அடிபணிந்து நின்ற மன்னன் தன்னிடம் கொள்ளையடித்து செல்ல வேண்டிய காரணம் கேட்க தர்மம் காக்காத உன்னை தர்மத்தில் ஈடுபட செய்யவே நான் வந்தேன் என்றார். அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவ மூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடலானார்.
இக்கோவிலின் அமைப்பு முழுவதும் சில காலத்திற்கு முன் பூமியில் புதையுண்டு போனது, பின்னர் மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னனின் பசுக்களை இங்கு ஓட்டி வந்து மேய்ப்பது வழக்கம். இதில் ஒரு பசு மட்டும் தனித்து பெருமாள் பூமியில் மறைந்து உள்ள இடத்தில் பால் சொறிவதை வழக்கமாக கொண்டிருந்தது. இதனை மேய்ப்பவன் மன்னனிடம் கூற மன்னன் தனது பரிவாரங்களுடன் அங்கே வந்து மணலை அகற்ற அங்கே வைகுண்ட பெருமாள் சன்னதியை கண்டு ஆனந்தித்து இப்பொழுதுள்ள கோவிலை அமைத்தார்.
இத்தலத்தில் பெருமாளை சூரிய ஒளி ஆண்டிற்கு இருமுறை சித்திரை 6, ஐப்பசி 6 ஆகிய நாட்களில் காலைக் கதிரவன் பெருமான் பாதத்தை தரிசித்து செல்கிறான். இதற்காக கொடி மரம் சற்று தெற்கே விலகி அமைக்கப்பட்டள்ளது. இப்பொழுதுள்ள கோபுரம் சந்திர குல பாண்டியனால் கட்டப்பட்டது. வீரப்பன் நாயக்கர் காலத்தில் கொடி மரமும், சந்தான சபாபதி காலத்தில் மண்டபமும் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கலை அம்சம் உள்ள கோவில் இங்கு உள்ள உற்சவர் திருமேனியை உருவாக்கிய சிற்பி இவர் அழகில் மயங்கி கன்னத்தில் கிள்ள சிற்பியின் ஆத்மாத்தமான அன்பின் அடையாளத்தை கன்னத்தில் வடுவாக ஏற்றுக் கொண்டார். இன்றும் இந்த வடுவை உற்சவரிடம் காணலாம்.
புராண சிறப்பு: ஆதிகாலத்தில் நைமிசாரண்ய புண்ணிய வனத்தில் மகரிஷிகள், பிரம்மரிஷிகள் போன்ற கல்விகேள்விகளில் சிறந்த விற்ப்பன்னர்கள் கூடி புண்ணிய தீர்த்தம் புண்ணிய க்ஷேத்திரம் பற்றி வாதிடும்போது அங்கு சூத மகா முனிவர் எழுந்தருளினார். அவரிடம் திருமாலின் சான்னித்தியம் கொண்ட தலங்களையும் தீர்த்தங்களையும் கூறுமாறு கேட்க சூத முனிவர் புண்ணிய தீர்த்தமாக தாமிரபரணியையும் திருமால் க்ஷேத்திரங்களாக நவதிருப்பதிகளையும் கூறி நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான திருவைகுண்டநாதனின் பெருமையை எடுத்துரைத்தார்.
முற்காலத்தில் சோமுகன் என்ற அரக்கன் பிரம்மனிடமிருந்து வேத சாஸ்திரங்களையும், படைக்கும் திறனையும் அபகரித்துச் சென்றான். பிரம்மனும் தன் இடது கையிலிருந்த தண்டத்தை ஒரு சிஷ்யராக மாற்றி பூமியில் உள்ள புண்ணிய தலங்களை தரிசித்துவிட்டு வர கட்டளையிட்டார். அந்த சிஷ்யர் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஜெயந்திபுரி என்ற இடத்திற்கு வந்ததும் அசுர மோகினிகளால் கவரப்பட்டு தனது கடமையிலிருந்து விலகி பிரம்மனின் கட்டளையை மறந்து இருந்தான். இதை தனது ஞான திருஷ்டியால் அறிந்த பிரம்மன் தனது வலது கையிலிருந்த கமண்டலத்தை ஒரு பெண்ணாக மாற்றி அந்த பெண்ணை கங்கையிலும் மேலான தாமிரபரணி நதிக்கரையில் தவம் செய்யத் தக்க புண்ணிய தலத்தை அறிந்து வருமாறு கட்டளையிட்டார். அந்தப் பெண்ணும் தாமிரபரணியின் பெருமையை அறிந்து தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருவைகுண்டத்தலத்தை பற்றி பிரம்மனுக்கு தெரிவித்தாள். பிரம்மனும் அதை அறிந்து கொண்டு தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி கடும் தவம் புரிந்தார். பிரம்மனுடைய தவத்தால் மனம் உவந்த சர்வேஸ்வரன் பிரம்மன் முன்பாக தோன்றி உனக்கு வேண்டுவன கேள் என்று அருள பிரம்மனும் தான் இழந்தவற்றை மீண்டும் பெறவேண்டி அவற்றைப் பெற்றுக் கொண்டார். மேலும் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமன்நாராயணனும் இத்தலத்தில் அர்ச்சாவிக்ரமாக திருவைகுண்டபதி என்ற பெயருடன் எழுந்தருளி இங்கு வந்து தம்மை வணங்கும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருள்பாலிக்கிறார். புராணக் கதை: திருவைகுண்டம் நகரில் வீரகுப்தன் என்ற புகழ் வாய்ந்த வணிகருக்கு கால தூசகன் என்ற மகன் இருந்தான். இவன் பிறர் பொருளை திருடும் குணம் கொண்டவன். இவன் திருடச் செல்வதற்கு முன் திருவைகுண்டநாதனை சேவித்து தான் திருடும்பொழுது யாருடைய கண்ணில் படாமலும் யாரிடமும் பிடிபடாலும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு திருடிய பொருளில் பாதியை ஆண்டவன் சந்நிதியில் சேர்த்துவிட்டு மீதியிருப்பதை தன் நண்பர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் கலைஞர்களுக்கும் தர்மம் செய்துவந்தான். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பலனாக திருவைகுண்ட தலத்தில் கலச தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்து வாழ்ந்து வந்தான். இவ்வாறிருக்க ஒரு நாள் நள்ளிரவில் மணப்படை ராஜ்ஜியத்தின் அரண்மணையில் பெரும் பொக்கிசங்களை கொள்ளையடித்து தப்பிவந்தான். ஆனால் இவனது சகாக்கள் காவலாளிகளிடம் பிடிபட்டனர். இவர்களின் மூலம் விபரங்களைத் தெரிந்து கொண்ட அரசன் கால தூசகனை சிறைபிடித்து வர காவலாளிகளுக்கு உத்தரவிட்டான். இதை அறிந்த கால தூசகன் திருவைகுண்டபதியை சரணடைந்து தம்மிடம் உள்ள பொக்கிசங்களை ஆலய கைங்கரியத்திற்கே அர்ப்பணித்துவிடுவதாக வேண்டிக்கொண்டான். சரணடைபவர்களை காப்பதை தன் சங்கல்பமாகக் கொண்ட எம்பெருமான் கால தூசகனை அடைக்கலம் கொடுத்து ரட்சித்தார். பிறகு எம்பெருமானே கால தூசகன் வடிவத்தில் அரசவைக்குச் சென்றார். அரசரும் கள்வர் தலைவன் வேடத்திலிருந்தவரை நோக்கி திருடிய உம்மை பார்க்கும் பொழுது எனக்கு கருணையே ஏற்படுகிறது நீ யார்? எனக் கேட்டார். எம்பெருமான் அரசரை நோக்கி கூறுகிறார் அரசரே உன் தவறை நீ உணரவில்லை அரசாங்கத்தின் செல்வங்கள்யாவும் உம்மாலும் உம்மை சுற்றியுள்ளவர்களாலும் வீணடிக்கப்படுகிறது. பணத்திற்கு நான்கு தாயாதிகள் (பங்காளிகள்) உண்டு. அதாவது தர்மம்,அரசன்,திருடன்,அக்னி ஆகியோராவர். இவர்களில் அரசன் என்பவன் தர்மத்தைக் கடைபிடித்து குடிமக்களைக் காக்கவேண்டும். நீவிர் அவ்வாறு செய்யத்தவறியதால் அதை உமக்கு உணர்த்தவே இத்திருவிளையாடலை நடத்தினேன் என்றும் நான் உலகைக் காக்கும் பெருமாள் என்றும் கூறி அரசருக்கு ஞானத்தையும் நல்ல புத்தியையும் எடுத்துரைத்தார். கள்ளனை காத்ததின் மூலம் திருவைகுண்டபதி, கள்ளபிரான் (சோரநாதன்) என்று அழைக்கப்பட்டார்.
ஆலயத்தின் தனிச் சிறப்பு:
இத்திருத்தலமானது நவதிருப்பதிகளில் முதலாம் திருப்பதியாகும். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஐம்பத்திநான்காவது திவ்ய தேசமாகும். திருக்கோயிலில் மூலவர் திருவைகுண்டநாதரின் திருவடிகளின் மத்தியில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தன்று காலை உதயத்திலும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று காலை உதயத்திலும் என வருடத்திற்கு இருமுறை சுவாமியின் திருவடிகளை வணங்கும் தன்மையில் சூரியனின் கதிர்கள் படிகிறது. இரவில் முழுமதி நிலவும் சுவாமியை நோக்கி ஒளிரும். சிவ பெருமானுக்கு பல தலங்களில் இந்த சூரிய வழிபாடு நடக்கிறது, ஆனால் திருமாலுக்கு இத்திருத்தலத்தில் மட்டுமே சூரிய பூஜை நடக்கிறது. இத்தலத்து சுவாமியை வணங்குவதால் சூரிய தோஷம் பித்ரு தோஷம் விலகுவதாக நம்பிக்கை.
பக்தர்கள் பிறவா நிலை (மோட்சம்) கிடைக்க, இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
தை முதல் நாளில் இத்தலத்து கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் அணிவித்து பூஜை நடத்துவார்கள். பின், அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். இதையடுத்து ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர்.ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் இங்கு காட்சி தருவதாக ஐதீகம். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற கருடனுக்கு சந்தன காப்பு செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.
திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருவைகுண்டம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருந்து திருவைகுண்டத்திற்கு போக்குவரத்து வசதி உள்ளது.