ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம்கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்றும் அதன் பண்டைய மரபு மற்றும் பக்தி பங்களிப்புகளால் அறியப்படுகிறது.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.
வரலாறு :
இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது.
#புராணம் :
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள்.
அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான்.
சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும்
பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார்.
இதனால் இந்த ஊருக்கு “ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.
அகஸ்திய முனி ஷண்பகராண்ய வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது வேட்டுவ இன அரசர்களைக் கண்டார். வில்லி மற்றும் புத்தன் என்பது அவர்கள் பெயர்.
அருகிலிருந்த ஆல மரத்தை காட்டி, இதனடியில் ஒரு குகை உண்டு. அந்த குகையில் வடபத்திர சாயி என்ற பெயரில் அந்த மகாவிஷ்ணு அனந்த சயனம் செய்கின்றார். அவருக்கு இந்த வனத்தில் ஒரு கோயில் கட்டு என்றார். அதற்குரிய தங்கமும்&வைரமும் அங்கு குபேரனே வைத்து காவல் செய்கிறான். உடனே இந்த திருப்பணியை தொடங்கு என கட்டளை இட்டார்.
அவர்களும் அகஸ்தியரின் வாக்கு வழி பொக்கிஷத்தை எடுத்து அந்த ஷண்பகராண்ய வனத்தை சற்று அழித்து ஒரு கோயில் கட்டினார்கள்.
அங்குறை வடபத்திர சயனரே இன்றும் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றி, பின் ஒரு ஊர் தோன்றிற்று.வில்லி & புத்தன் என்ற அரசர்கள் உருவாக்கியமையால் வில்லிபுத்தூர் என பின்நாளில் வழங்கப்பட்டது.
திருவேங்கடவன் என எல்லோரும் போற்றக்கூடிய வெங்கடாஜலபதி சுவாமியின் பத்தினியான பத்மாவதி தாயாரே, இந்த கோயிலின் பிராகாரத்தில் கோதை நாச்சியார் ஆக அவதாரம் செய்தாள்.
விஷ்ணு சித்தர் என்ற ஆழ்வாரை, பெரியாழ்வார் என வைஷ்ணவம் போற்றும். அவரே இந்த கோதை நாச்சியாரை எடுத்து வளர்த்தார்.
அனுதினமும் பூமாலையும் பாமாலையும் ஒரு சேர செய்து வடபத்திர சாயிக்கு சூட்டி பூஜை செய்து வந்தார். கோதை பருவமடையும் காலத்தில் இறைவன் மேல் அளவிலா பக்தி பூண்டு பூமாலை தொடுக்க தந்தைக்கு உதவி வந்தார்.
ஒருமுறை மாலையைத் தான் அணிந்து எப்படி இருக்கும் என ஒரு கிணற்றில் எட்டிப் பார்த்து ரசித்தார். இதைக் கண்ட தந்தை விஷ்ணு சித்தர் கோதையை கடிந்து கொண்டார்.
அன்று இரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து, ‘இனி எப்போதும் கோதை சூடிய மாலையை மட்டுமேதான் நான் சூடுவேன். இதுவே எனது ஆசை’ என்றார். அன்றிலிருந்து கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் விளங்கிற்று.
இந்த திருத்தலம், வராக க்ஷேத்திரம் ஆகும். ஆதிவராகர் ஹிரண்ய வதம் முடித்து, பின் சற்று அமர்ந்து, கோபம் தணிந்து, அகம் குளிர்ந்த தலம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவை பொடிப் பொடியாய்ப் போகும் என்பது பலரும் அனுபவ பூர்வமாய் கண்ட உண்மை.
இங்கு திருமுக்குள தீர்த்தம் உண்டு. இதில் நீராடி வடபத்திர சாயியை வழிபட்டோர் அடையாத வெற்றியே இல்லை. கண்ணாடி தீர்த்தத்தில் தன் முகத்தை தானே தரிசித்தால் திருஷ்டி நீங்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை, ஸ்ரீவடபத்ர சாயி என்பார்கள். மிக பிரமாண்டமான, தொன்மையான, புராணப் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும் ஒன்று! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம். 108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று!
எல்லாவற்றுக்கும் மேலாக, கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள், ஸ்ரீவில்லிபுத்தூரை!
நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார்
ஒருநாள்… இறைவனுக்கு சார்த்தவேண்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், “கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு” என்றார்.
ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதைஆண்டாள், இறைவனையே நினைத்து ஏங்கினாள். இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். அதையடுத்து, பூப்பல்லக்கில் ஸ்ரீரங்கம் சென்று இறைவனோடு ஐக்கியமானாள்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் பிரார்த்திக்க, இறைவனும் அதை ஏற்று இத்தலத்தில் எழுந்தருளினார். வைணவர்களின் முக்கிய தலமாக இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது.
மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக , சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்புருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் ஆகீயோரின் உருவங்கள் இருக்கின்றன.
விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபட திறந்து வைக்கப்படுகின்றன.
திருப்பதியில் புரட்டாசி 3&வது சனிக்கிழமை பிரம்மோற் ஸவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவிக்கிறார். விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் இது!
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்துபோனாராம். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று துவங்கி “திருப்பல்லாண்டு” பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், “நீரே பக்தியில் பெரியவர்” என வாழ்த்தினார். அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர், பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.
வைகாசி பவுர்ணமியின்போது, ஆண்டாளுக்குத் தயிர் சாதம், “பால்மாங்காய்” நைவேத்யம் செய்கின்றனர். சுண்ட காய்ச்சிய பாலில் நறுக்கிய மாங்காய் துண்டுகள், மிளகு, சீரகம், சீனி ஆகியவை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும். பெரியாழ்வார் தலைமுறையைச் சேர்ந்த குடும்பத்தினர் இதனை படைக்கின்றனர். இந்நேரத்தில் ஆண்டாள் வெண்ணிற உடை, சந்தனம், மல்லிகை மலர் சூடி காட்சி தருவாள்.
பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கும்போது, பெரியாழ்வார் தன் இருப்பிடத்திற்கு செல்கிறார். அவருடன் பெரியாழ்வாரின் வம்சாவளியினர் சேர்ந்து கொண்டு 2 கலசத்தில் தீர்த்தம் எடுத்து வந்து, ரங்கமன்னாருக்கு பூரணகும்ப மரியாதை கொடுத்து, தங்கள் பெண்ணை மனப்பூர்வமாக கொடுப்பதாகச் சொல்லி, கன்னிகாதானம் செய்வார்கள். பிறகு ரங்கமன்னார், ஆண்டாளுக்கு மாலையிட்டு, தன் மனைவியாக்கிக் கொள்கிறார்.
ஆண்டாள் சன்னதியில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபம், முத்துப்பந்தல் எனப்படுகிறது. இதில் வாழைமரம், மாவிலை மற்றும் பூச்செண்டும் இருக்கிறது. மேலே திருமாலின் பாதம் இருக்கிறது.
பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு அருகில் இருக்கிறார் கருடாழ்வார்!
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்!
இத்தனை பெருமையும் சாந்நித்தியமும் மிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதும் பெருமாளை ஸேவிப்பதும் புண்ணியங்களையும் அனைத்து நலன்களையும் சேர்க்கும்!
ஆண்டாள் எண்ணெய்க்காப்பு :
திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது.
நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும்.
மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், மார்கழியின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவளியினரான வேதபிரான் பட்டர் வீட்டுக்குச் செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, “பச்சைப்பரத்தல்” என்பார்கள். கொண்டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்தியத்தை ஆண்டாளுக்கு படைப்பார்கள். ஆண்டாளுக்கு பெருமாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக்கும் இவ்வாறு கொடுத்தனர். அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது. திருமணம் ஆனதும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். சத்தான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை!
அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையேறும் மலையேறுபவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒரு தொழில்முனைவோருக்கு இது பக்திக்கான இடம் மட்டுமல்ல; ஜவுளி, கைத்தறி மற்றும் சிமென்ட்களுக்கான ஒரு தொழில்துறை மையமான ராஜபாளையத்தை சுற்றி வருவதன் மூலம் வணிகத்தைத் தேடுவதற்கு இது ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது – இங்கிருந்து 10 கி.மீ. , பட்டாசு மற்றும் லித்தோ பிரிண்டிங். நீங்கள் இனிப்புகளை விரும்பினால், திருநெல்வேலி ஹல்வாவைப் போன்ற ஸ்ரீவில்லிபுட்டூர் பால்கோவா (பால் கோவா) ருசியைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆண்டல் கோயில் ஆண்டல் கோயில்
இவ்வாறு பலதரப்பட்ட மக்களை ஈர்ப்பது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுட்டூரில் வடக்கில் இருந்து மதுரையிலிருந்து 75 கி.மீ தொலைவிலும், தெற்கிலிருந்து திருநெல்வேலியில் இருந்து 70 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.