திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒரு திருத்தலம்.திருநின்றவூரில் அமைந்துள்ளது. சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றது.
சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம்.
இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன.
திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தைப் பாடாது சென்று விடவே, தாயார் பெருமாளைப் பாடல் பெற்று வர அனுப்பி வைத்தார். பக்தவத்சல பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை திருத்தலத்தையும் தாண்டி, திருக்கடல்மல்லையும் (மாமல்லபுரம்) வந்துவிட்டார். அங்கே திருநின்றவூர் பெருமாளுக்காக ஒரு பாடல் பாட, பாடலுடன் திரும்பி வந்த பக்தவத்சல பெருமாள் ஒரு பாடல் மட்டும் பெற்றுவந்தது கண்ட தாயார், மற்ற திருத்தலங்களுக்கு அதிகம் பாடல் இருக்க நமக்கு ஒன்றுதானா என்று திரும்பவும் அனுப்ப, அதற்குள் திருக்கண்ணமங்கை வந்து விட்ட திருமங்கையாழ்வார் திருநின்றவூர் பெருமாள் (பக்தவத்சல பெருமாள்) திரும்பவும் வந்ததை ஓரக்கண்ணில் கண்டு அவரையும் மங்களாசாசனம் செய்தார்.
இங்கு பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் உத்பல விமானம். பெருமாளின் தரிசனம் கண்டவர்கள் சமுத்திரராஜன், வருணன் ஆவர். பவுர்ணமி, உத்திரம், திருவோணம், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷ நாட்கள் ஆகும்.
குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 59 வது திவ்ய தேசம்.
மூலவர்: பக்தவத்சலப்பெருமாள்
உற்சவர்: பத்தராவிப்பெருமாள்
அம்மன்/தாயார்: என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
தல விருட்சம்: பாரிஜாதம்
தீர்த்தம்: வருண புஷ்கரணி
பிரத்யட்சம்: ஸமுத்திர ராஜன், வருணன்
ஆகமம்/பூஜை: பாஞ்சராத்ர ஆகமம்
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
பெயர்: திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் திருக்கோவில்
புராண பெயர்: தின்னனூர்
ஊர்: திருநின்றவூர்
மாவட்டம்: திருவள்ளூர்
திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.