திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 47 வது திவ்ய தேசம்.பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஓருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாட்சிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்த சேர்ந்தார். இதனால் பயந்த அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.புராண வரலாற்றின்படி பிருகு மஹரிசிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்
இத்தலத்தில் இறைவன் யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்னும் பெயர்கள் கொண்டு விளங்குகிறார். இறைவி வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார். இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் ஆகியன. விமானம் கனக விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது.
பிருகு முனிவருக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. இயல்பான வடிவத்தோடு காட்சி தந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்த போது எப்படி இருந்திருப்பார் என்று. இந்த காட்சியை தனக்கு மட்டும் காட்ட வேண்டும் என்று இந்த தஸ்லத்தில் தவம் கொண்டிருந்தார். பிருகு முனிவரின் வேண்டுகோளை அறிந்து பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக கனக விமானத்தின் கீழ் காட்சி அளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
அன்றாடம் நாம் ஏதாவது ஒரு விஷயத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களுக்காக பயந்து சாகிறோம். எந்த காரியமும் சரிவர செய்ய முடியாமல் ஏதோ ஒரு பயத்தில் நடுங்கி கொண்டிருப்பவர்களும், கெட்ட கனவுகளால் அவதிப்படுபவர்களும், தாதாக்களினால், குண்டர்களினால், தொந்தரவு செய்வதால் கஷ்டப்படுகிறவர்கள், படிக்கமுடியாமல் திண்டாட கூடிய மாணவ மாணவிகளும் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டு அதனால் தன் எதிர்கால வாழ்க்கை வீணாக போய்விடுமோ என்று நினைப்பவர்களும் இங்குள்ள நரசிம்மரை தரிசனம் செய்து தங்கள் உள்ளக் கிடக்கையை பிரார்த்தனையாக செய்தால் அதை பகவான் நல்லபடியாக மாற்றி நடத்தி வைப்பார், மன பயமும் உடனே விலகும்.
மூலவர்: முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
அம்மன்/தாயார்: வேளுக்கை வல்லி
தீர்த்தம்: கனக சரஸ், ஹேமசரஸ்
பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: திருவேளுக்கை, வேளுக்கை
ஊர்: காஞ்சிபுரம்.
நமக்கெல்லாம் மன நிம்மதியையும் தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் பெருமாள் சன்னதி தான். எப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சர்வசாதாரணமாக நிற்பதற்கு அடிப்படைக் காரணம் பெருமாள் கோயில் என்பது உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, பெருமாளுக்கே பிடித்தமான இடம் ஒன்று இருக்கிறது. அப்படி பெருமாளே தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை என்னும் புனிதஸ்தலம்.