மூலவர் தோத்தாத்ரிநாதன், வானமாமலைப் பெருமாள்
உத்ஸவர் தெய்வநாயகன்
தாயார் சிரீவரமங்கை தாயார்
திருக்கோலம் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் இந்திர தீர்த்தம்
விமானம் நந்தவர்தன விமானம்
மங்களாசாசனம் நம்மாழ்வார்
இருப்பிடம் திருச்சிரீவரமங்கை, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது ‘வானமாமலை’ என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியிருந்து நாங்குநேரிக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து நடந்து சென்று சிறிது தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து 25 கி.மீ.
திருமகள் ஸ்ரீவரமங்கையாக இந்த க்ஷேத்திரத்தில் வளர்ந்து திருமாலை மணந்ததால் ‘ஸ்ரீவரமங்கை’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள திருக்குளம் முற்காலத்தில் நான்கு ஏரிகளாக வெட்டப்பட்டிருந்ததால் ‘நாங்குநேரி’ (நான்கு ஏரி) அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சிந்து தேசத்து அரசன் குசாஸன மகரிஷியால் சபிக்கப்பட்டு நாய் உருவமாக மாறினான். இங்குள்ள புஷ்கரணிக்கு வந்து நீராடி தனது சாபம் நீங்கப் பெற்றான்.
உரோமச முனிவர் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்ததால் ‘உரோமச க்ஷேத்திரம்’ என்றும், ஆதிசேஷன் இத்தலத்தில் தவம் செய்ததால் ‘நாகன் சேரி’ என்றும் அழைக்கப்படுவதாகக் கூறுவர். ஊர்வசியும், திலோத்தமையும் இங்கு தவமிருந்து பெருமாளின் இருபுறமும் வெண்சாமரம் வீசும் பாக்கியம் பெற்றதாக ஐதீஹம்.
மூலவர் தோத்தாத்ரிநாதன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் தெய்வநாயகன். தாயார் சிரீவரமங்கை என்று வணங்கப்படுகின்றார். பிரம்மா, இந்திரன், உரோமச முனிவர், பிருகு முனிவர், மார்க்கண்டேயர் ஆகியோருக்கு பெருமாள் பிரத்யக்ஷம். தானாக தோன்றிய ஸ்தலம்.
பெருமாளுக்கு தினமும் நடைபெறும் தைல அபிஷேக எண்ணெயை அங்குள்ள கிணற்றில் ஊற்றிவிடுவார்கள். இந்த எண்ணெயை நம்பிக்கையுடன் சாப்பிட்டால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சடாரியில் ஸ்ரீசடகோபன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வானமாமலை மடத்தின் தலைமை இடம். மணவாள மாமுனிகளின் தங்க மோதிரத்தை வானமாமலை ஜீயர் ஐப்பசி மூல நட்சத்திரத்தன்று சாத்திக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
பாவத்தையும், தோஷத்தையும் செய்யாதவர்கள் இவ்வுலகில் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். சாதாரண குடிமகனை விட பெரும் பொறுப்பில் இருக்கும் அரசன் மிக அதிகமாகவே செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் மிகப்பெரிய தோசத்திற்கு ஆளாகி, நாய் போல் தெருவில் வலம் வர வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. இருப்பினும் அப்போது கூட திருமாலை நினைத்தால் அவர்களது கொடிய பாவம் மன்னிக்கப்பட்டு விடும். இப்படிப்பட்ட அருமையான சம்பவம் நடந்த இடம் தான் வானமாமலை.
திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி வரும் வழியில் நாங்குநேரியில் இறங்கினால் வானமாமலை ஜீயரின் பொறுப்பில் இயங்கி திருச்சுரீவரமங்கை எனும் புண்ணிய ஷேத்திரத்தை அடையலாம். மூலவர் தோத்தாத்ரி நாதன்(வானமாமலை) வீற்றிருக்கும் திருக்கோலம். உத்ஸவர் தெய்வ நாயகன். தாயார் உபயநாச்சியார். சிரீவர மங்கை தாயார். தீர்த்தம் இந்திர தீர்த்தம், சேற்று தாமரை தீர்த்தம். விமானம் நந்தவர்த்தன விமானம். பிரம்மா, இந்திரன், ரோமசர், ப்ருகு, மார்க்கண்டேயருக்கு திருமால் நேரிடையாகவே தரிசனம் கொடுத்த ஸ்தலம்.
இது தானாகத் தோன்றிய ஸ்தலம். பெருமாளுக்கு தினம் தைல அபிஷேகம் உண்டு. அந்த எண்ணையை எடுத்து சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் உள்ள கிணற்றில் ஊற்றி விடுகிறார்கள். இந்த எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் தீராத வியாதிகள் நீங்கும்.
மிகப்பெரிய மகரிஷியான குசாஸனரின் சாபத்தால், சிந்து தேசத்து அரசன் நாயாக மாறி, இங்கு வந்து தன் பாவத்தையும் , சாபத்தையும் போக்கிக் கொண்டான். பழைய உருவத்தையும் அடைந்தான். பகவான் மதுகைடபரிகள் என்னும் அரக்கர்களை கொன்ற ரத்தம் பட்ட பூமி தேவி தன் இயல்பான தூய்மையை இழந்தாள். அப்போது பகவான் பூமாதேவியின் கெடுதல் பலனை மாற்றி மறுபடியும் தூய்மையாக மாற்றி பூமா தேவிக்கு காட்சி கொடுத்தார்.
அதனால் தான் இந்த இடம் பூலோக வைகுண்டம் என்று சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றது. ஊர்வசியும் திலோத்தமையும் இந்த ஸ்தலத்தில் தவமிருந்து பகவானுக்கு பிரார்த்தனை செய்து பகவான் அருளால் பெருமாளுக்கு இருபக்கமும் நின்று வெண்சாமரம் வீசிக் கொண்டிருப்பதாக ஐதீகம். மணவாள முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் புஜங்களில் ஒருவர் ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமி. ஒவ்வொரு ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திர தினத்தன்று வானமாமலை ஜீயர் சுவாமிகள் மணிவாள முனிவர் அணிந்து தங்க மோதிரம் அணிந்து கொண்டு தீர்த்தம் சாதிப்பது வழக்கம்.
இவ்வாலயத்தினுள் 25 அடி ஆழமும் 15 அடி அகலமும் கொண்ட எண்ணெய்க் கிணறு உள்ளது. ஒவ்வொரு நாளும் இத்தலத்திலுள்ள மூலவர் பெருமாளுக்குத் தினமும் ஆறுபடி நல்லெண்ணெய்யும் சந்தன எண்ணெய்யும் கலந்து காப்புத் திருமஞ்சனம் செய்வர். பின் அந்த எண்ணெய்யைத் திறந்த வெளி எண்ணெய்க்கிணற்றில் சேர்ப்பர். இந்த எண்ணெய் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. இது சர்வரோக நிவாரணியுமாகும். இந்த எண்ணெய்யைச் சிறிதளவு உண்டு தன் நோயைத் தீர்க்க பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கி அருள்பெறுகின்றனர். இந்த எண்ணெய் குறித்து அகத்தியரும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுவர். பத்மபுராணத்தின் 57,58 சுலோகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
திருமகள், “ஸ்ரீ வரமங்கை’ என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் உறையும் தோத்தாத்திரி நாதரை மணந்ததால் “திருச்சிரீவரமங்கை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததாகக் கூறுவர்.
இத்தலத்தைச் சுற்றி நான்கு ஏரிகள் இருந்த காரணத்தால் “நான்குஏரி’ எனப்பெயர் பெற்று நாளடைவில் “நாங்குநேரி’ ஆயிற்று என்பர்.
ஆதிசேஷன் இத்தலத்தில் தவமிருந்து எம்பெருமானுக்குத் திரு அணையாக இருக்கும் பேறு பெற்றார். மேலும் உரோமச முனிவரும் தவமிருந்து இத்தலத்துப் பெருமாளின் தரிசனம் பெற்றார் என, தலவரலாறு தெரிவிக்கிறது. இத்தலம், வடமொழியில் “தோத்தாத்ரி’ என்று அழைக்கப்படுவதால் தமிழிலும் “தோத்தாத்திரி ஆலயம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதோடு மலையும் வனமும் சூழ்ந்த இடமாதலால் “வானமாமலை’ என்றும் அழைக்கின்றனர்.
தீராத சருமநோய், தொழுநோய், வாதம், மூட்டுவலி போன்ற நோய்களையும் தீராத நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர் என்ற பெருமை “நாங்குநேரி’ தோத்தாத்திரி நாதருக்கு உண்டு.