சுவாமி : ஜெகன்னாதப் பெருமாள்.
அம்பாள் : கல்யாணவல்லி.
தீர்த்தம் : ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்.
தலவிருட்சம் : அரசமரம்.
தீர்த்தம் – ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருப்புல்லணை
ஊர் – திருப்புல்லாணி
மாவட்டம் – ராமநாதபுரம்
தலச்சிறப்பு : இக்கோவில் திவ்ய தேசம் 108 வைணவ சேத்திரங்களில் 44வது ஆகும். ஆழ்வார்களில் திருமங்கையழ்வாரால் 20 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகும். புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.
திருத்தல வரலாறு : முன்னொரு காலத்தில் புல்லர், காவலர், கண்வர் என்ற 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்த பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரச மர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்கு சக்ர தரியாய் அபய முத்ரையுடன் காட்சியளித்து தன்னை சேவிக்கும் பக்தர்களை காக்கும் பொருட்டு இப்பொழுதும் சான்னித்யமாய் அருள் பாலிக்கிறார்.
தசரதன் மகபேறு வேண்டி உலகத்தை சுற்றிவரும் பொழுது இந்த பெருமாளை 60000 மனைவிகள் இருந்தும் குழந்தை பேறு இல்லையே என்று வேண்ட உடனே ஆதி ஜெகன்னாத பெருமாள் ஒரு மந்திரத்தை சொல்ல பின்பு தசரதன் இத்தலத்தில் நகாபிரதிஷ்டை (அதாவது இப்போது அந்த சந்தான கிருஷ்ணனை தர்பசயன ராமர் சன்னதி அருகில் தரிசிக்கலாம்) செய்து பின் புத்ரகமோஷ்டி யாகம் செய்ய பெற்றதாக கூறப்படுகிறது.
இராமாயணத்தில் சீதையை ராமன் தேடி வரும் காலத்தில் இத்தலத்தில் சேதுக்கரை வரை சென்று எங்கெங்கிலும் சமுத்திர மயமாய் இருக்கிறதே எப்படி செல்வது, கடலைதாண்டுவதா? யார் உதவியை நாடுவது? தெற்கே சென்ற அனுமனையும் காணவில்லையே? என்ற ஆயாசத்துடன் வல்வில் ராமன் சோகமயமாய் தன் தம்பி லக்ஷ்மணன் மடியில் சயனம்(படுக்கை) தலைசாய்த்து தர்பையை பரப்பி உடல் நீட்டி அதாவது 3 நாட்கள் இத்தலத்தில் உபவாசம் கிடந்தார்.
இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது. ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர். தலவரலாறு புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம். இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றார். சீதையை மீட்க இலங்கைக்கு கடலில் பாலம் அமைக்க சமுத்திர ராஜனை அழைக்க மீன்களுக்கு இடையேயான வழக்கை தீர்த்து வைக்கச் சென்றதால் அழைப்பிற்கு உடனே வராமல் சமுத்திர ராஜன் தாமதிக்கவே கரையில் மூன்று நாட்கள் ராமபிரான் தங்கியிருந்த திருத்தலம். தாமதமாக வந்த சமுத்திர ராஜன் காரணம் கூறி மன்னிப்பு வேண்டினார்.இந்த சமுத்திரராஜன் சமுத்திரராணியுடன் சயனராமர் சன்னதியின் முன்மண்டபத்தில் அமைந்துள்ளனர்.
புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை, தசரதனுக்கு பெருமாள் உபதேசம் செய்த இடம். தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக இருக்கும் (பெருமாள் காட்சி தந்தாக கூறப்படுகிற) அரசமரம் உள்ளது.
பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி)காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.
பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில், “மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்” எனச் சொல்லியுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற அரச மரமே இத்தலத்தின் விருட்சமாகும். இந்த மரம் சுவாமி சன்னதிக்குப் பின்புறம் உள்ளது. பக்தர்கள் இதை மகாவிஷ்ணுவாக கருதி வழிபடுகிறார்கள்.
சீதையை மீட்டு இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த இராமர், இங்கு சுவாமியைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமனாக சீதை, இலட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் இவருக்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
இத்தலம் வந்த இராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். இராமன், அந்த பாணத்தை பிரயோகித்து இராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த சுவாமிக்கு, “வெற்றி பெருமாள்” என்றும் பெயருண்டு. இராமர் வழிபட்டதால் இவர் “பெரிய பெருமாள்” என்றும் பெயர் பெறுகிறார்.
சங்கீத மூர்த்திகளான தியாகராஜர், முத்துச்சாமி ஆகியோர் இத்தலத்து சுவாமி பற்றி கீர்த்தனைகள் பாடியுள்ளனர். அரிச்சந்திர புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் கோயில் எதிரே உள்ளது. காசி, இராமேஸ்வர தீர்த்த யாத்திரை செல்லும் பக்தர்கள் சேதுக்கரையில் தீர்த்த நீராடி யாத்திரையை முடிக்கின்றனர். இராமனை உபசரித்த பரத்வாஜர், இங்கு சுவாமியை வழிபட்டுள்ளார்.
பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
பிரார்த்தனை:
பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
வழிகாட்டி:
முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : இராமநாதபுரம் 10 கி.மீ., இராமேஸ்வரம் – 75 கி.மீ., இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் இருந்து இராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு வசதியாக உள்ள ரயில் போக்குவரத்து வசதி இராமநாதபுரத்திற்கு வருவதற்கு எளிதாக உள்ளது.
திருவிழா:
ஆதிஜெகந்நாதருக்கு பங்குனியிலும், இராமருக்கு சித்திரையிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாக்களில் ஜெகந்நாதர், இராமர் இருவரும் கருட வாகனங்களில் எழுந்தருளுவர். ஜெகந்நாதர் பங்குனி உத்திரத்தன்றும், சித்ராபவுர்ணமியன்று இராமபிரானும் தேரில் எழுந்தருளுவர்.
பிரம்மோற்சவத் திருவிழா – பங்குனி மாதம். இராமர் ஜெயந்தி திருவிழா – சித்திரை மாதம். இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, பொங்கல், தீபாவளி.