அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார். பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது.
சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார். சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் தவமியற்றி திருமாலால் சாபம் நீங்கப்பெற்றார். முனிவர் கண்டு வணங்கிய அவ்வுருவே சுந்தரபாஹூ என்று வடமொழியிலும் அழகர், மாலிருஞ்சோலைநம்பி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வலா யோக நரசிம்மர் பிரசித்த பெற்றதாகும். இவர் உக்கிர ரூபத்தில் உள்ளதால் நரசிம்மரின் உக்கிரத்தை தனிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்நெய், தேன் முதலியவைகளால் திருமஞ்சனம் நடைபெறுகிறது . யோக நரசிம்மரின் கோபத்தை தனித்து சாந்தி அடைவதற்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நிலையில் உள்ளது.மற்ற விஷ்ணு கோயிலில் நரசிம்மர் முலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்கு நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் உள்ளார்.
புராண அடிப்படையில் கள்ளழகர், மீனாட்சியம்மனின் உடன்பிறந்தவர். சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (வளரி), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர்.அழகர் கள்ளர் வேடத்தில் வருவதால், அழகர் என்ற பெயர் கள்ளழகர் என மாறியது. இதனால் கள்ளர் இனத்திற்கு தலைவராகவும் குல தெய்வமாகவும் அழகர் இருக்கிறார். வைகை ஆறு வரை வந்து பின் வண்டியூர் சென்று அழகர்மலை திரும்புகிறார். திருமலை மன்னர் காலத்திற்கு முன் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா சித்திரை மாதத்தில் முழு நிலவன்று மதுரையை அடுத்துள்ள தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில், கள்ளழகரை மதுரை வைகையாற்றில் எழுந்தருளச் செய்து, மதுரை சித்திரைத் திருவிழாவாக நடத்தியவர்.
சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வை எதிர் சேவைஎன்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.
மூலவர் – அழகர் அல்லது அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்)
தாயார் – சுந்தரவல்லி (தனிக்கோயில் நாச்சியார்)
காட்சி – சுதபமுனி, தர்மதேவன், மலையத்வஜ பாண்டியன்
திசை – கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் – நூபுர கங்கை எனும் சிலம்பாறு
விமானம்- சோமசுந்தர விமானம்
உற்சவர் – கள்ளழகர்
மதுரையில் தினந்தோறும் திருவிழாதான். ஆனால் சித்திரை திருவிழாதான் பிரசித்தம். மீனாட்சி திருக்கல்யாணமும் மறுநாள் நடக்கும் தேரோட்டமும், அதை தொடர்ந்து சித்திரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் மதுரைவாசிகளுக்கு மறக்க முடியாத நினைவுகள். கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுதான் என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு அழகரை காண வரும் கூட்டம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
சித்ரா பௌர்ணமியன்று வானில் முழு நிலவு ஜொலிக்க தலை நிறைய மல்லிகை சூடி அழகரை தரிசிக்க கூட்டம் கூட்டமாய் போகும் மதுரை பெண்கள், கள்ளழகரை தரிசிப்பது தனி அழகுதான். அழகர் மலையில் இருந்து மதுரை வந்து ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து விட்டு மீண்டும் அழகர் மலைக்குத் திரும்பும் வரை ‘சாமி இன்னிக்கு எங்க இருக்குது?’ என்பதே சித்திரைத் திருவிழாவில் மதுரைக்கு வரும் மக்களின் முக்கியமான கேள்வியாக இருக்கும்.
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார். வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார் என்கிறது புராண கதை.
அது ஓரு புறம் இருக்க, சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் ‘மண்டூகோ பவ’ என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, ‘விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு.
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்’ என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அழகர் மலை அழகருக்கு வித்தியாசமாக தோசை நைவேத்தியம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்பு தோசை தயாரிக்கப்படும்.