ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும்.இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்திக்கு குருபெயர்ச்சியன்று சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள் குருபெயர்ச்சியன்றும் வியாழக்கிழமைகள் தோறும் ஆலங்குடி வந்து அருள்மிகு தெக்ஷிணாமூர்த்தியை தரிசனம் செய்து செல்கிறார்கள். மாசி மாதம் மூன்றாவது வியாழக்கிழமை மகாகுருவாரமாகக் கொண்டாடப்படுகிறது.
நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது. குருவிற்கு உரிய தலம் ஆலங்குடி. குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் வியாழக்கிழமையான இன்று குரு பரிகார தலமாக உள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம். தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது.
இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இந்த தலத்தின் அம்மையின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை என்பதாகும். சுக்ரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சன்னதியில் அம்சமாக, நேர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெயரும் “சுக்ரவார அம்பிகை” என்பதாகும். விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். இதற்கு சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. கைலாசத்தில் பார்வதி தோழிகளோடு பந்தாடிய போது உயரப் போன பந்தை பிடிக்க கையை உயர்த்தி பந்தை எதிர்பார்த்து நிற்க வான வீதியில் சென்ற சூரியன் தன்னை நிற்க சொல்வதாக கருதி தேரை நிறுத்த அவன் தொழில் தடைபட்டு உலகம் அவதியுற்றது. உடன் அனைவரும் சிவ பெருமானிடம் முறையிட அவர் சாபம் காரணமாக பார்வதி பூலோகத்தில் அவதரித்து தவம் செய்து இறைவனை திருமணம் செய்து கொண்டார். மூலவர்:ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், உற்சவர்:தட்சிணாமூர்த்தி அம்மன்/தாயார்: ஏலவார்குழலிதல விருட்சம்: பூளை என்னும் செடி தீர்த்தம்:பிரமதீர்த்தம், அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள். புராண பெயர்:இரும்பூளை, திருவிரும்பூளை ஊர்:ஆலங்குடி மாவட்டம்: திருவாரூர்
ஆபத்சகாயர் கிழக்கு நோக்கிய சந்நிதி. இத்தலத்துச் சிறப்புடைய குரு தக்ஷிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம் – குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர். தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான்.
தட்சிணாமூர்த்தி சன்னதியை ஒட்டி, உற்சவர் சிலைகள் இருக்குமிடத்தில் சுந்தரர் சிலை இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து ஒளித்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க, அம்மை கண்ட தன் குழந்தையை எடுத்துச் செல்வதாக கூறினார். ஆலங்குடி வந்து பார்த்த போது சிலைக்கே அம்மை போட்டிருந்தது. இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்தும், 24 நெய் தீபங்கள் ஏற்றியும் வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம். முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல், கொண்டைக் கடலைச் சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனங்களுடன், கேஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவான் அருள் பெறுவர்.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் மகா குரு வாரத்தன்று புனித நீர் கொண்டு வருதலும் பஞ்சமுக தீபாராதனையும், மாசி மாத கடைசி குரு வாரத்தன்று சங்காபிஷேகமும், விசேஷ அபிஷேக அலங்கார ஆராதனையும் நடைபெறுகிறது. தைப்பூசத்திலும் பங்குனி உத்திரத்திலும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியைக் கொண்டு 10 நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.
வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது. கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ தொலைவில் இத்தலம் இருக்கிறது.