நவகிரகங்களிலேயே நீதி காரகன், கர்மகாரகன், ஆயுள்காரகன் என்று போற்றப் படக்கூடிய வரும் அதர்மம் செய்பவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துபவரும் நீதிக்கு காரகனுமாகிய சனீஸ்வரரின் பெயர்ச்சி பற்றி இன்று நாம் காண இருக்கின்றோம் அதற்கு முன்னதாக சனீஸ்வரரை பற்றிய சிறுகுறிப்பு
நவகிரகங்களிலேயே மிக மிக மெதுவாகவும் கிரகங்களுக்கு எல்லாம் கடைசி கிரகமாகவும் இருக்கும் கிரகம் சனி என்ற கிரகமாகும். மேலும் இந்த பூமியில் ஜனித்த அனைத்து மனிதர்களும் ஏதேனும் ஒரு கர்மவினையை தாங்கி தான் பிறப்பு எடுக்கிறார்கள்.
அவர்களின் கர்மவினையை அனுபவிக்க வைத்து, அவர்கள் பிறந்ததின் நோக்கத்தைப் முழுமை அடைய செய்வதே சனிபகவானின் வேலை ஆகும். ஆகவே சனி பகவான் ஒருவர் வாழ்வில் அவர் செய்யவேண்டிய கர்மவினைகளை மிக விரைவாக செய்யவைத்து அவரின் கர்ம வினையில் இருந்து விடுபட செய்வதே அவரின் நோக்கமாகும். கர்ம வினை என்பது ஒரு ஜீவாத்மா மற்றொரு ஜீவாத்மா அதற்கு செய்த நல்வினை தீவினைகளின் அடிப்படையிலும், அந்த ஜீவாத்மாவின் நிறைவேறாத ஆசைகளின் அடிப்படையிலும் உருவாகிறது. அப்படி உருவாகி இருக்கக்கூடிய கர்மவினை பதிவுகளை அரும்பாடுபட்டு கர்மவினை பதிவுகளை நம்மை அனுபவிக்கச் செய்து தீர்த்து வைக்கிறார். ஆகவேதான் சனிபகவானை சங்கடங்கள் போக்குபவர் நீதியை நிலை நாட்டுபவர் தண்டனை கொடுப்பவர் என போற்றப்படுகின்றார், மேலும் சனிபகவானுக்கு பயப்படாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெயர் பெற்றவர் சனி பகவான் இருப்பினும் சனி பகவானை கண்டு யார் யார் பயப்பட வேண்டும் என்று வரைமுறை உள்ளது அனைவரும் சனி பகவானை கண்டு கலங்க வேண்டிய அவசியம் இல்லை, பல ஜாதக அமைப்பிற்கு சனிபகவான் கொட்டிக் கொடுத்து அவரை வாழ்வாங்கு வாழ செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த சனிப்பெயர்ச்சியால் நாட்டிற்கு என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்பதையும் பன்னிரு ராசிகாரர்களுக்கு என்ன பலன்கள் நடைபெற இருக்கிறது என்பதை நாம் ஒன்றன் பின் ஒன்றாக விரிவாக காண்போம் வாருங்கள்
வாக்கிய பஞ்சாங்கப்படி சார்வரி வருடம் மார்கழி மாதம் 11 ம் நாள் சனிக்கிழமை 57 நாளிகை 04 வினாழிகை அளவில் அதாவது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி உத்திராடம் இரண்டாம் பாதத்திற்கு அதாவது மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதன் காரணமாக, மேஷ ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து தசம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
ரிஷப ராசிக்கு அஷ்ட ஸ்தானத்தில் நின்று, அஷ்டம சனி தோஷத்தை கொடுத்த சனி பகவான் தற்போது தோஷத்தில் இருந்து விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.
மிதுன ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் அமர்ந்து கண்ட சனி தோஷம் கொடுத்துக்கொண்டிருந்த சனி பகவான் அதிலிருந்து விலகி, அஷ்டம ஸ்தானத்தில் அஷ்டம சனி தோஷத்தையும் ஏற்படுத்துகிறார்.
கடக ராசிக்கு ரோக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் தற்போது சப்தம ஸ்தானத்திற்கு வந்து கண்டகச் சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார்
சிம்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் தற்போது ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
கன்னி ராசிக்கு அர்த்தாஷ்டம தோஷத்தில் இருந்த சனி பகவான் தற்போது பஞ்சம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
துலாம் ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் தற்போது சுகஸ்தானத்திற்கு வந்து அர்த்தாஷ்டம சனி தோஷத்தை ஏற்படுத்துகிறார்.
விருச்சிக ராசிக்கு கடந்த ஏழரை ஆண்டுகள் இருந்த சனி தோஷம் தற்போது நிவர்த்தியாகி சனி பகவான் தைரிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
தனுசு ராசிக்கு ஜென்ம சனியாக இருந்த சனி தோஷம் தற்போது குடும்ப சனி தோஷமாக பெயர்ச்சி ஆகிறார்.
மகர ராசிக்கு விரய சனி தோஷமாக இருந்த சனிபகவான் தற்போது ஜென்ம சனியாக பெயர்ச்சி ஆகிறார்.
கும்ப ராசிக்கு லாபத்தில் இருந்த சனிபகவான் தற்போது விரயத்திற்கு வந்து ஏழரை சனி தோஷத்தை துவங்குகிறார்.
மீன ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் ஆனவர் சனி பெயர்ச்சி பலன்களை வழங்க உள்ளார்.
ஆக இந்த சனிப்பெயர்ச்சியால் பன்னிரு ராசிக்காரர்கள் என்னென்ன பலன்களை அனுபவிக்க உள்ளார்கள் என்பதை ஒவ்வொரு ராசி ரீதியாக காண்போம் வாருங்கள்.
முதலில் நாட்டிற்கு சனிப்பெயர்ச்சியால் என்ன பலன் நடைபெறும் என்பதை காண்போம்.
பொதுவாக தொழில் காரகன், கர்மகாரகன் என்று போற்ற படக்கூடிய சனி பகவான் ஆனவர் தொழில் ஸ்தானம் , கர்ம ஸ்தானம் என அழைக்கப்படும் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவது என்பது நாட்டில் தொழில் வளம் பெருகும் குறிப்பாக மண்ணியல் சார்ந்த தொழில்கள் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பது, தொழிலாளர்கள் தரம் உயர்வது, புதிய தொழிற்சாலைகள் அதிகமாக உருவாகுவது, கீழ்மக்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பது, கீழ் மக்களின் வாழ்வாதாரம் பெருகுவது, அரசு நிதி நெருக்கடியை சந்திப்பது, மழை வளம் சற்று குறைந்து எண்ணை தொடர்பான பயிர்கள் அதிக விளைச்சலைக் காண்பது இருக்கும், தொழிற்சங்கங்கள் அதிகமாகி, முதலாளிகளுக்கு நெருக்கடியை கொடுப்பர். அடுத்து பன்னிருராசிகளுக்கு என்னன்ன பலன்கள் நடக்கும் என்பதை காண்போம் வாருங்கள்.