வெற்றியைத் தரும் விஜயாசனப் பெருமாள் கோவில், வரகுணவல்லி, நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வரகுணமங்கை விஜயாசனப்பெருமாள் திருத்தலத்தைப் பற்றி இந்த வாரம் நலம் தரும் ஆலயங்கள் பகுதியில் அறிந்து கொள்ளலாம். நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியான அருள்மிகு விஜயாசனப் பெருமாள் திருக்கோயில் நவக்கிரக தலங்களில் சந்திரன் தலமாக வழிபடப்படுகிறது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் இது விளங்குகிறது
நத்தம் என்றழைகப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
வரகுணமங்கை என்ற இரு தாயார்கள் பெருமாளுடன் உள்ள தலம் இதுவாகும். அவர் பெயராலேயே ஸ்ரீ வரகுண மங்கை என்று ஊருக்கு பெயர் அமைந்துள்ளது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டத் தலம் இது. அதுவும் ஒரே ஒரு சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். அக்னிக்கு இந்தப் பெருமாள் காட்சி தந்து அருள் புரிந்த தலம். தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம் என இரு தீர்த்தங்களைக் கொண்ட தலம். இந்தத் தலத்தில் பெருமாள் விஜயகோடி விமானத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் ‘விஜயாசனர்’ என்ற திருநாமத்தோடு அமர்ந்து அருள்புரிகிறார்.
சந்திர தோஷ நிவர்த்தி ஸ்தலம் :
வரகுணமங்கை விஜயாசன பெருமாள் திருக்கோவில் என்றழைக்கப்படும் இந்தத் திருக்கோவில், நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தலம் ஆகும். வரகுணமங்கை என்று சொல்லுவதை விட, ‘நத்தம் கோவில்’ என்று கேட்டாலே பொதுமக்கள் எளிதில் அடையாளம் காட்டுகிறார்கள்
ஒரு சமயம் ரோமச முனிவர் என்பவர், இந்த தலம் அமைந்துள்ள இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரின் சீடன் சத்தியவான் என்பவன், இங்குள்ள அகநாச தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தான். தீர்த்தக் கரையின் மறு பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவன் ஒருவன், மீன்களைப் பிடித்து உலர்த்திக் கொண்டிருந்தான். சத்தியவானுக்கு அந்த மீனவனின் செயல் பாவமாக தென்பட்டது. ‘இவ்வளவு கொடூரமாக உயிர்களைக் கொலை செய்கிறானே. இவனுக்கு நரகமே கிடைக்கும்’ என்று சத்தியவான் எண்ணிக்கொண்டிருந்தான்.
அப்போது மீன்களைப் பிடிப்பதற்காக மீண்டும் குளத்தில் வலையை வீசினான் அந்த மீனவன். அந்த சமயத்தில் அவனுக்கு பின்னால் இருந்து நாகம் ஒன்று தீண்டியதில், அவன் அந்த இடத்திலேயே இறந்து போனான். சில நிமிடங்களிலேயே விண்ணிலிருந்து வந்த ஒரு தேவ விமானம், மீனவனை ஏற்றிக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றது. இதனைக் கண்டு சத்தியவான் மிகுந்த ஆச்சரியம் அடைந்தான்.
அவன் உடனடியாக கரையேறி, ரோமச முனிவரை நோக்கிச் சென்றான். அவரிடம் தான் கண்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் விளக்கினான். அத்தோடு ‘உயிர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் ஒருவனுக்கு எப்படி சொர்க்க பதவி கிடைத்தது’ என்றும் முனிவரிடம் கேட்டான்.
முக்தி அளித்த தலம் :
தன் ஞான திருஷ்டியால் அனைத்தையும் கண்டுணர்ந்தார் ரோமசர். பின்னர் சத்தியவானிடம் கூறத் தொடங்கினார். ‘இந்தப் பிறவியில் மீனவனாய் இருந்தவன், போன ஜென்மத்தில் விதர்ப்ப நாட்டை ஆண்ட விசுவ சகன் என்ற மன்னனின் மகன் ஆவான். அவன் தர்மத்தின் வழியில் பற்றும், அநேக நல்ல காரியங்களையும் செய்திருந்தான். இருப்பினும் அவனுக்கு கூடாத நட்பு காரணமாக தவறான செய்கையும் இருந்தது. சென்ற பிறவியில் செய்த தவறான செய்கையால் நரகத்தை அடைந்தான். அவன் செய்த நற் செயல்களால் இந்தப் பிறவியில் வரகுணமங்கை என்னும் இத்தலத்தில் பிறந்து முக்தி அடையும் பேறு பெற்றான்.’ இத்தலத்தில் உயிர் நீத்ததால் மோட்சம் செல்லலாம் என்று இத்தலத்தின் மேன்மையை எடுத்துரைத்தார்.
ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். ‘சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்’ என்று கூறினார்.
வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.
இத்தல பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க, கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். பகவான் பள்ளிகொண்ட கோலத்தை விட, நிற்கின்ற கோலத்தை விட, வீற்றிருக்கின்ற திருக்கோலம் சிறப்பானது. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.
இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். மனிதர்கள் இந்த தலத்தில் உள்ள பெருமாளை வேண்டி வழிபட்டால், பூலோகத்தில் வாழும் காலம் வரை சவுகரியமான வாழ்க்கையைப் பெறலாம். வைகுண்டத்திலும் பெருமாளின் கருணைக்கு பாத்திரமாகலாம். மேலும் ஒரு சிறப்பாக இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
வழிபாடு :
தினமும் மூன்று கால பூஜை நடைபெறும் இந்த ஆலயத்தில், வைகானச ஆகமப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது. திங்கட்கிழமை தோறும் சந்திரன் வழிபாடும், செவ்வாய்க்கிழமையில் நரசிம்மர் வழிபாடும், சனிக் கிழமை, பவுர்ணமி, பிரதோஷங்களில் பெருமாள் வழிபாடும் சிறப்புக்குரியதாக உள்ளது. பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்திலும் இந்தத் தலம் இருக்கிறது.
சிற்பச் சிறப்பு:
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள ராஜகோபுர சிற்பங்களின் அழகும் வடிவமைப்பும் வியக்கத்தக்கதாகும். கோபுரத்தின் முன்புறத்தில் தசாவதாரச் சிற்பங்களும், காளிங்க நர்த்தனச் சிற்பமும் வடமேற்கு பகுதியில் வாசுதேவர் ஸ்ரீகிருஷ்ணரை கூடையில் வைத்து யமுனை நதியை கடக்கும் சிற்பங்களும் கிழக்கே திருமுக மண்டலம், ஆதி சேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த திருக்கோலம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இலக்கியச் சிறப்பு: இத்திருத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. தனிச் சிறப்பு: நவதிருப்பதிகளில் இரண்டாவது திருப்பதியாகவும் சந்திரனுக்குறிய தலமாகவும் விளங்குகிறது. நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஐம்பத்துமூன்றாவது திவ்ய தேசமாகவும் விளங்குகிறது. அருள்மிகு யோக நரசிம்மருக்கு பிரதோஷ காலத்தில் அனைத்துவகையான திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருத்தலம் அமைவிடம்: திருவைகுண்டம்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் திருவைகுண்டத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திருவைகுண்டம் மற்றும் ஏரலில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
இறைவன்: அருள்மிகு விஜயாசனப் பெருமாள்
இறைவியர்: அருள்மிகு வரகுணமங்கை அருள்மிகு வரகுணவல்லி தீர்த்தம்: தேவ புஷ்கரணி, அக்னி தீர்த்தம், அகநாச தீர்த்தம்
தல விருட்சம்: புளிய மரம்
ஆகமம்: வைகாநச ஆகமம் விமானம்:
விஜயகோடி விமானம்.