திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும்.
கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால், இத்தல இறைவன் “பாண்டவ தூதப்பெருமாள் என” அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இவரை “தூதஹரி” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையை கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என ரிஷியிடம் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் செய்த ஜனமேஜய மன்னனுக்காக பெருமாள், தன் பாரத கால தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.
மஹாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர் சூதாட்டத்தில் கௌரவர்கள் சூழ்ச்சியால் தன் செல்வங்களையும் நாட்டையும் இழந்தார். அவர்களுக்கு ஒரு வீடாவது தர வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துரியோதனனிடம் கேட்டு வாங்க தூது சென்றார். துரியோதனன் ஸ்ரீ கிருஷ்ணரை அவமானப்படுத்த ஒரு யுக்தி செய்தான். பகவான் அமர உள்ள ஆசனத்தின் கீழே ஒரு பெரிய பாதாளத்தை உண்டாக்கி, அதன் மேல் பசுந்தழைகளைப் போட்டு, அவர் அமர்ந்தவுடன் கீழே விழும்படி செய்தான். அவன் சூழ்ச்சிப்படியே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் ஆசனத்தில் அமர்ந்தவுடன், பாதாளத்தில் விழுந்தார். அப்பொழுது அவரைத் தாக்க சில வீரர்களை அங்கு துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை வீழ்த்தி, அழித்து, தன் விஸ்வரூப தரிசனம் காட்டினாராம். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் அவரை பாண்டவதூத பெருமாள் என அழைக்கப்படுகிறார். பாரதப் போர் முடிந்த பின்பு பல ஆண்டுகள் சென்ற பிறகு, ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற பெரிய மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு ஸ்ரீ கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மஹரிஷியிடம், தன்னால் கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை கூறும்படி வேண்டினார்.
அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார் அரசர். தவத்தின் பயனாக இங்கு பெருமாள் தன் பாரத தூது கோலத்தை இத்தலத்தில் அருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளியதாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், தன் பாதங்களை பூமியில் அழுத்தி தனது விஸ்வபாத யோக சக்திகளை செலுத்தியதால், இத்தலம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுறது. ஆகவே, இங்கு அங்கபிரதட்சணம் செய்வோருக்கு சகல துன்பங்களும் நீங்கும், பாவ விமோசனம் கிட்டும் என்பது நம்பிக்கை.
சுவாமி : பாண்டவ தூதர் திருக்கோலம் (கிழக்கே திருமுக மண்டலம்).
அம்பாள் : ருக்மணி, சத்யபாமா.
தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்.
விமானம் : சக்கர விமானம், வேத கோடி விமானம்.
தலச்சிறப்பு : இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார். கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. புதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்று மங்களாசாசனம் செய்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 வது திவ்ய தேசம் ஆகும்.
இத்தலம் ரோகிணி நட்சத்திரக் கோவில் ஆகும். ரோஹிணி தேவி இந்த தலத்து பெருமாளை வணங்கி வழிபட்டு, சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். சந்திரன், தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோஹிணியையும், அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும், மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக வரலாறு. தனக்கு ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனமும் காட்டிய பெருமாளுக்கு வழிபாடு செய்ய, தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன், சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி எட்டாம் தேதிகளில் இங்கு வந்து அர்ச்சனை செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.