ஆந்திர மாநிலத்தில் அமைந்து இருக்கின்ற, ‘அகோபிலம்’, திருத் தலத்தின் பெருமையை எங்கேயும் காண இயலாது. கருணாமூர்த்தி வடிவான நம்பெருமான் ஸ்வாமியானவர், நாமவளி சக்கரவர்த்தி வடிவரூபனான, பிரஹல்லாதனுக்கு, அருள் பாலிக்கின்றார்.
அகோபிலம் திருத்தலத்தில் காணப்படுகின்ற, பெருமானின் நவ கோலங்கள் அனைத்தும், உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வைக்கின்றன. தனது, பக்தனான, பிரஹல்லாதனுக்கு அருள் பாலிக்க வேண்டி, ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் அமர வைத்து, அதன் பின்னர், வயிற்றைக் கிழித்த நிலையில், குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்ட அம்சம் பொருந்தியவர் தான், ஜுவாலா நரசிம்மர் ஆனவர். அகோபிலம் திருத்த்தளத்தின், மூலவர்.
பிரகலாதனை காப்பதற்காக, ஹிரண்ய வதம் முடித்து, தனது கோபம் முற்றிலும் தணிந்து, தனது திருக்கரத்தில் படிந்த ரத்தக் கறையை அருகில் இருக்கின்ற ஓடை நீரில் சுத்தம் செய்து கொள்கின்றார். நரசிம்மர் ஓடையில் கை வைத்த அந்த சுட்டிக்காட்டப்படுகின்ற இடம் மிகவும் செந்நிறமாக இன்றும், காட்சி அளித்துக்கொண்டு இருக்கின்றது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். ஆனால், அந்த இடத்தை ஒட்டிக் கொஞ்சம் முன்னும், பின்னும் பார்க்கும் போது, அந்த நீரின் ஒடையானது, சாதாரணமாகக் காட்சி அளிக்கின்றது என்பது அதிசயமான காட்சியாகும். இன்றும், இந்த அகோபிலமானது கண்களுக்கு விருந்தாகவும், ஆன்மீக அதிசயமாகவும் காட்கை அளிக்கின்றது என்பது ஒரு ஆன்மீக அற்புதமாகும்.
நரசிம்மருக்குப் பானகம் நிவேதனமாக செய்து வழிபாட்டு வணங்கினால், பக்தர்களின் கடன் தொல்லையானது தீர்ந்திடும் என்றும், பக்தர்கள் கருதுகின்றார்கள். தாயாருடன் இருக்கின்ற பெருமாள் மாலோலன் என்றும் அழைக்கப்படுகின்றார். செஞ்சு லக்ஷ்மி என்கின்ற உடனமர் தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்த காரணத்தால், பெருமாளின் திருநாமம் மாலோலன் என்று அழைக்கப்படுகின்றது.
மேலும், அகோபிலம் என்கின்ற இந்த திருத்தலத்தின் பெயர் நாமமே திரு மந்திரம் ஆகும். அஹோபிலம் என்கின்ற திருத்தலமானது, ‘மஹாபலம்’ என்று சொல்கின்ற வகையில், உடல், மனம் வாக்கு, புத்தி போன்ற இந்திரியங்களுக்கு, மஹாசக்தி அளிக்கக்கூடிய சக்தி பொருந்திய திருத்தலமாகும். மேலும், மாலோலன் தரிசனமானது, மனத்துக்கு இனியது என்பதும், அகோபிலம் திருத்தலத்தின், ஐதீகத்திற்கு சான்று பகருகின்றது.
நரசிம்மரின் அருளும் அனுமதியும் இல்லாமல் அஹோபிலத்தை அண்டிவிட முடியாது. நரசிம்மரைக் கட்டுப்படுத்தும் சக்திகள் இரண்டுதான். ஒன்று, தாயாரின் திருக் கடாட்சம். இன்னொன்று, பக்தி. அஹோபிலத்தின் பெருமைகளை உணராமல் பக்தி பிறக்காது. பக்தி பிறக்காமல் “அஹோபிலம்’ அகப்படாது, புலப்படாது.
பாவன நதிக்கரையில் அமைந்திருப்பதால் இந்தக் கோயில் பாவன நரசிம்மர் என்கிற பெயர் பெறுகிறது. அஹோபிலத்திலுள்ள கோயில்களில் ரத்தினம்
என்று அழைக்கப்படும் இந்தத் தலத்திற்குச் சில தனிச் சிறப்புகள் உண்டு. நவக்கிரகங்களில் ராகுவின் பரிகாரத் தலமான பாவன நரசிம்மரை வழிபட்டால், இப்பிறவியிலும் முப்பிறவிகளிலும் செய்த பாவமெல்லாம் அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.
அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அந்தி சாய்ந்தால் செல்ல முடியாது. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம். நரசிம்ம அவதாரம் எடுத்த மகா விஷ்ணு, நல்லமலை காட்டில் ஆதிவாசிகள் மத்தியில் பிறந்திருந்த தாயாரை மணந்ததாக ஐதீகம். செஞ்சு லெட்சுமி என்று அழைக்கப்படும் தாயாருடன் காட்சி தரும் இந்தப் பெருமாளை பரத்வாஜ முனிவர் தரிசித்துப் பாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
நவக்கிரகங்களில் சந்திரனின் பரிகாரத் தலமான பார்கவ நரசிம்மர் கோயில், நரசிம்மருக்கு அடுத்த அவதாரமான பரசுராமருடன் தொடர்புடையது. இரண்ய கசிபுவை வதம் செய்த அந்தத் தருணத்தைக் காண வேண்டும் என்று தவமிருந்த பரசுராமருக்கு, அதேபோலக் காட்சியளித்த இடம் இந்தக் கோயில். அஹோபிலத்திலுள்ள நரசிம்ம மூர்த்திகளில் உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் காணப்படும் நரசிம்மர் பார்கவ நரசிம்மர் என்று கூறலாம்.
புஷ்கர தீர்த்தத்துக்கு நிகரான அக்ஷ்ய தீர்த்தத்தின் கரையில் அமைந்திருக்கும் பார்கவ நரசிம்மர் சந்நிதியில் வசிஷ்டர் உள்ளிட்ட பல முனிவர்கள் தவமிருந்ததாக ஐதீகம். நரசிம்மரின் காலடியில் பிரகலாதன் தொழுத வண்ணம் இருப்பதை இங்கே காணலாம்.
அஹோபில நரசிம்மர் கோயில் ஒரு குடவரைக் கோயில். குகைக்குள்ளே நரசிம்மர் சுயம்புவாக அருளியிருக்கிறார். ஒரு பெரிய முட்டை வடிவப் பாறையில் குடையப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கோயிலில் முக மண்டபமும், மகா மண்டபமும் கிழக்கு நோக்கியும், குகையின் அமைப்பால் கர்பக்கிரகம் வடக்கு நோக்கியும் அமைந்திருக்கின்றன. முக மண்டபத்தையொட்டி கொடி மரமும், பலி பீடமும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அஹோபில நரசிம்மர் கோயிலில் வட்டமான ஒரு பகுதி தடுக்கப்பட்டிருக்கிறது. வெகுகாலமாகத் திறந்த குகையாக இருந்த இந்தக் கோயிலுக்கு உள்ளே இன்னொரு கோயில் இருந்ததாகக் கூறுகிறார்கள். அஹோபில மடத்தின் ஆறாவது ஜீயராக இருந்த ஸ்ரீ ஷஷ்ட்ட பராங்குச யதீந்திர மகா தேசிகன் அந்த குகைக் கோயிலுக்குள் சென்றவர் திரும்ப வரவேயில்லை. அங்கேயே அவர் ஜீவ சமாதி அடைந்து விட்டதால், அந்தப் பகுதி மூடப்பட்டு, பக்தர்களின் பாதம் பட்டுவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது
நவ நரசிம்மர்களில் ஏனைய நரசிம்மர்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு மாலோல நரசிம்மருக்கு மட்டுமே உண்டு. முதலாவது ஜீயரின் கனவில் திருமால் மாலோல நரசிம்மராகக் காட்சியளித்தார், அஹோபில மடத்தின் உற்சவ மூர்த்தியாக இருப்பது மாலோல நரசிம்மர்தான். இவரது தங்க விக்ரகம்தான் ஜீயர்கள் செல்லுமிடமெல்லாம் அவர்களுடன் பயணிக்கும் பூஜைக்குரிய நரசிம்மர்.
செவ்வாய் கிரகத்துக்குகந்த மாலோல நரசிம்மர் கோயிலின் படிக்கட்டுகள் இறங்கும் இடத்தில் ஒரு தீர்த்தம் இருக்கிறது. இந்தக் குளத்தில் குளித்தால் எல்லாவித சரும ரோகங்களும் குணமடையும் என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இப்போது போதுமான பராமரிப்பு இல்லாத இந்தக் குளத்தில் கை கால் கழுவித் தண்ணீரை தெளித்துக் கொள்வதுடன் பக்தர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.
மாலோல நரசிம்மர் கோயிலிலிருந்து ஜூவாலா நரசிம்மர் கோயிலுக்குப் போகும் வழியில் அமைந்திருக்கிறது ஸ்ரீ வராக நரசிமமர் கோயில். இதைக் குரோத நரசிம்மர் என்றும் அழைக்கிறார்கள். குருவின் அம்சமான குரோத நரசிம்மர் கோயில் வேதாத்திரி, கருடாத்ரி மலைகளுக்கு இடையே அஹோபில நரசிம்மர் கோயிலிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. வராகரின் தலை, மனித உடல், சிங்கத்தின் வால் என்று இங்கே நரசிம்மர் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார்.
வராக நரசிம்மர் கோயிலுக்கு அருகே ஸ்ரீ ராமானுஜர் தவமிருந்த குகை காணப்படுகிறது. இந்தக் கோயிலுக்குப் போகும் வழியில் காணப்படும் மண்டபம் ஒரு காலத்தில் வேதப் பாடசாலையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. குரு அம்சம் பொருந்திய வராக நரசிம்மர் கோயிலில் ஐந்து நாட்கள் விரதம் பூண்டு தவமிருந்தால் நினைத்த காரியம் சித்தியடையும் என்று நம்பப்படுகிறது. அதனால் இதை சித்த úக்ஷத்திரம் என்றும் அழைக்கிறார்கள்.
வராக நரசிம்மர் கோயிலிலிருந்து காட்டாற்றுப் பாதை வழியாக, பாறாங்கற்கள் நிறைந்த ஓடைகள் வழியாக நடந்து சென்றுதான் ஜூவாலா நரசிம்மரை அடைய முடியும். நவ நரசிம்மர் யாத்திரையிலேயே மிகவும் கடினமானது ஜூவாலா நரசிம்மர் தரிசன யாத்திரைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடர்ந்த காட்டுக்குள், கைத்தடியின் உதவியுடன் நீரோடைகள் வழியாகப் பாறைகள் மீது கவனமாகக் கால் பதிந்து நடக்க வேண்டும். வழிகாட்டியின் துணையில்லாமல் இந்தக் காட்டுப் பாதையில் பயணிக்க முடியாது. தவறிப் போனால் திக்குத் தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். சுமார் 6 கி.மீ. தூரம் காட்டாற்று ஓடைகள் வழியாகவும், செங்குத்தான படிகளில் ஏறியும் பயணிக்கும்போது, என்னதான் உடல் வலுவும் கைத்தடியும் இருந்தாலும் ஆதார சக்தியாகத் துணை வருவது பக்தி மட்டும்தான் என்பதை அநுபவத்தில் உணரலாம்.
உயர்ந்து நிற்கும் உக்ர ஸ்தம்பத்தின் கீழே இருக்கிறது ஜூவாலா நரசிம்மர் கோயில். தூணைப் பிளந்து வெளியே வந்து நரசிம்மர் இரண்யனை வதம் செய்த இடம்சான் உக்ர ஸ்தம்பம். அந்த இடத்தில்தான் இரண்யனின் மாளிகை இருந்ததாகக் கருதப்படுகிறது. உயர்ந்து நிற்கும் அந்த அச்சலாச்சய மேரு மலையிலிருந்து விழும் அருவிக்கு நடுவில் புகுந்து சென்றால் அங்கேதான் இருக்கிறது சனி அம்சமுள்ள ஜூவாலா நரசிம்மர் கோயில்.
இரண்ய வதத்திற்குப் பிறகு ஜூவாலா நரசிம்மர் கோயில் அருகேயுள்ள தடாகத்தில் கை கழுவியதால் அந்தத் தடாகத்தில் தண்ணீர் இப்போதும்கூடச் சிவப்பாகவே காட்சியளிக்கிறது. பத்துக் கைகளுடன் இந்த ஆலயத்தில் தரிசனம் வழங்கும் நரசிம்மர், இரண்ய வதக் கோலத்தில் ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கிறார்.
ஜூவாலா நரசிம்மரின் தரிசனம் முடியும்போது, நவ நரசிம்மர்களின் தரிசனமே கிடைத்து விட்டாற்போல ஒரு அமைதி ஏற்பட்டு விடுகிறது. ஜூவாலா நரசிம்மர் கோயிலிலிருந்து மலையையும் பள்ளத்தாக்கையும் பார்க்கக் கிடைக்கும் அந்த அற்புதக் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் சிரமங்களைக் கடந்து அஹோபில யாத்திரை மேற்கொள்ளலாம் போலிருக்கிறது.
போனது போலவே நூற்றுக்கணக்கான படிகளில் இறங்கி, மந்தாகினி ஆற்றுப் பாதையிலும், காட்டாற்றுப் பாதையிலும் பாறைகளுக்கு நடுவே தட்டுத் தடுமாறி நடந்து கடந்து மீண்டும் அஹோபில நரசிம்மர் கோயிலை அடைந்தபோதுதான் உணர்ந்தோம், நவ நரசிம்மர்களில் இன்னும் மூன்று நரசிம்மர்களின் தரிசனம் பாக்கி இருப்பதை.
காரஞ்ச நரசிம்மர் அல்லது சாரங்க நரசிம்மர் கோயில் கீழ் அஹோபிலத்துக்குத் திரும்பும் வழியில் இருக்கிறது. நாம் புங்க மரம் என்று
அழைப்பதைத் தெலுங்கில் காரஞ்ச மரம் என்கிறார்கள். காரஞ்ச மரத்தின் அடியில் அமைந்திருப்பதால் அதைக் காரஞ்ச நரசிம்மர் என்று அழைப்பதாகத் தெரிவித்தார் வழிகாட்டி பவன்குமார்.
காரஞ்ச நரசிம்மரல்ல, அது சாரங்க நரசிம்மர் என்று அழைப்பவரும் உண்டு. சாரங்கம் என்பது ஒரு வகை வில். அந்த வில்லை வைத்திருந்ததால்தான் ராமருக்கு சாரங்கபாணி என்று பெயர்.
இந்த இடத்தில் ஸ்ரீ ராமரை எண்ணித் தவமிருந்த அனுமனுக்கு நரசிம்மர் காட்சி அளித்தார். அவரைத் தனது இஷ்ட தெய்வமான ஸ்ரீராமராக அனுமன் ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் ராமரும் ஒன்றுதான் என்பதை அனுமனுக்கு உணர்த்த ராமபிரானின் சாரங்கம் என்கிற வில்லுடன் நரசிம்மர் காட்சி அளித்ததால், இதற்கு சாரங்க நரசிம்மர் என்று பெயர். கேது சேக்ஷத்திரமான சாரங்க நரசிம்மர் கோயிலில், ஆதிசேஷன் குடைபிடிக்க, வலது கரத்தில் ஸ்ரீசக்கரமும் இடது கரத்தில் வில்லும் தரித்து வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறார் நரசிம்மர்.
தனது அவதார நோக்கமான இரண்யன் வதம் முடிந்துவிட்ட நிலையிலும் நரசிம்மர் உடனடியாக பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை. பிரகலாதனுக்குப் பல யோக முத்திகளைக் கற்றுக் கொடுக்கிறார். கீழ்க்கரங்களில் யோக முத்தியுடனும் மேற் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் தென் திசை நோக்கி அமர்ந்தபடி காட்சியளிக்கிறார் புதனின் ஆதிக்கமுள்ள யோகானந்த நரசிம்மர்.
யோகானந்த நரசிம்மரை பிரம்மா வழிபட்டதாகப் புராணக் கதை இருக்கிறது. ஒரு குகைக்குள் இருந்த யோகானந்த நரசிம்மர் இப்போதிருக்கும் கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டு மீள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அமைதி நாடுபவர்கள் இங்கே தியானம் செய்யும்போது கிடைக்கும் அதிர்வலைகள் அற்புதமானவை என்று பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். நவ நரசிம்மர்களில் கடைசியாக நாங்கள் தரிசனம் செய்தது சத்ரவட நரசிம்மரை. மிகவும் வித்தியாசமான நரசிம்மரை இங்கே தரிசிக்க முடிகிறது.
பக்தியின் உச்சம் பிரகலாதன்! சக்தியின் உச்சம் நரசிம்மர்!!