திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம்.திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய வடிவிலான இறைவனாக விளங்குவது இங்கு மட்டும்தான். இத்தலம் திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது. தனியாக கோவில் உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. தினசரி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது.
மூலவர் – கள்வப்பெருமாள் (ஆதிவராகர்)
தாயார் – சவுந்தர்யலட்சுமி
தீர்த்தம் – நித்யபுஷ்கரிணி
ஆகமம் – வைதீக ஆகமம்
பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – திருக்கள்வனூர்
ஊர் – காஞ்சிபுரம்
மாவட்டம் – காஞ்சிபுரம்
மாநிலம் – தமிழ்நாடு
வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது. அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், தன்னைக் கண்டாலே மக்கள் செழிப்புற்று வாழ்வர் என்றும் பெருமையாகப் பேசினாள். அதோடு விடாமல் மகாவிஷ்ணு, “கருமை நிறக் கண்ணனாக” இருப்பதையும் சுட்டிக்காட்டினாள். அவரோ “அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது” என்று அமைதியாக சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை. அழகு மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமிக்குப் பாடம் கற்பிக்க எண்ணினார் விஷ்ணு. “பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக் கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டாயோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக” என சாபம் கொடுத்து விட்டார். கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து, சாப விமோசனம் தரும்படி கேட்டாள். “பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு சென்று தவம் செய்தால் உனது பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்” என்றார் விஷ்ணு.
இத்திருத்தலத்தில் அரூப ரூபத்தில் இருக்கும் ஒரு லட்சுமியை வணங்கினால் அழகின் மீது உள்ள மோகம் குறையும் என்பது நம்பிக்கை