சுவாமி : ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான், நின்ற திருக்கோலம் கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்.
அம்பாள் : ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி (தாயார்களுக்கு தனித்தனி சன்னதி).
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம், திருசங்கண்ணி துறை.
விமானம் : கோவிந்தவிமானம்.
தலவிருட்சம் : புளியமரம் (உறங்கா புளி – இது இக்கோவிலின் தலவிருட்சம், இப்புளியமரத்தின் இலைகள் இரவில் மூடிக்கொள்வதில்லை. நம்மாழ்வார் சன்னதிக்கு மேல்மாடத்தில் உள்ளது).
தல வரலாறு : ஒரு சமயம் திருமாலிடம் பிரம்மா தான் தவமிருக்க இடம் கூறுமாறு வேண்ட திருமால் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார். ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் ஆதி நாதன், ஆதிபிரான் என திருநாமம் கொண்டார். திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என வழங்கப்படுகின்றது. இங்கு ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால் சங்கின் வேறு பெயர் குருகூ. குருகூ மோட்சம் பெற்ற தலம் குருஊரு. குருகூர் என்றும் கொள்ளலாம். சங்குமோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று கூறுகின்றனர்.
சாலக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணச் சிறுவன் வேதம் படிக்கும் காலத்தில் அதை சரியாக படிக்காமலும் வேதத்தை இகழ்ந்து பேசியும் வந்தான். இதனால் கோபமுற்ற குரு அவனை ஈழிகுலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பதை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களின் ஆலய துப்புரவு பணிகளில் ஈடுபட்டு தன் காலங்கடந்தான் மறு பிறவியில் தாந்தன் என்னும் பெயரில் கீழ்குலத்தில் பிறந்த ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினான். பின்னர் குருகூர் திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான்.
அங்கே இருந்தவர்கள் இவனை வெறுத்து ஒதுக்க அவன் கிழக்கே சென்று மறுகரையில் ஆதிபிரானை மணலில் அமைத்து வழிப்பட்டான். திடீரென தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு கண் தெரியாமல் போகவே அவர்கள் பெருமாளை சரணடைய அசரீரியாய் நாங்கள் தாந்தனை ஒதுக்கியதற்கு தண்டனை என்று கூற அவர்கள் அவன் இருப்பிடம் சென்று மன்னித்தருள வேண்டியபின் கண்ணொளி பெற்றனர். பெருமாளும் தாயாரோடு காட்சி கொடுத்து தாந்தனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இதனால் தாந்த ஷேத்ரம் என கூறுகின்றனர்.
பிற்காலத்தில் தாந்தன் தங்கிய ஆலமரத்தில் முன்பு ஒரு முறை தங்கிய வேடன் ஒருவன் மறு பிறவியில் சங்கன் என்னும் முனிவராக கடுந்தவம் கொள்கையில் நாரதமுனி அவனிடத்தில் தவத்திற்கான காரணம் கேட்க அவன் மோட்சம் வேண்டும் என்று கூற அவரும் குருகூர் சென்று பெருமாளை வேண்டுமென அறிவுறுத்த முனிவரும் சங்காக மாறி குருகூர் சென்று பெருமாளை வேண்ட பெருமாள் காட்சி அளித்து மோட்சம் அளித்தார். அந்த இடம் தான் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று அழைக்கப்படுகறது.
இங்கு இருக்கும் புளியமரம் இலக்குமனன் எனப்டுகிறது. ஆதிசேனாக இலக்குமனன் இருப்பதால் சேத்திரம் எனவும். வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராஹ நாராயணன் காட்சியளித்ததால் வராஹசேத்திரம் எனவும் நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும் பஞ்ச முஹா ஷேத்திரம் என்றும் கூறுவர். நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.
நாலாயிர திவ்ய பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி வம்சத்தினரிடம் கண்ணி நுண் சிறுத்தாம்பு பெற்று அதை பலாயிரம் முறை ஜெபிக்க நம்மாழ்வார் நேரில் வந்து அருள நாரதமுனிஅவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. இங்குள்ள ஆதிபிரான் சுயம்பு உருவம் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் மூல வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி தன் சக்திகளை பிரையோகித்து உருவாக்கிய சிற்பம் கைப்படாத சிற்பம் என்று கூறப்படுகிறது.
இத்திருக்கோயிலில் கருடன் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. கருட பகவான் எல்லா கோயில்களிலும் கை கூப்பி வணங்கிய நிலையில் அமைந்திருப்பார். இத்திருக்கோயில் மட்டும் கைகளில் அபஹஸ்தமும், நாகரும், சங்கு சக்கரத்துடனும் காணப்படுகிறார்.
பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளையாடல்கள் புரிவதே வேலை. அதுபோல் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை படைக்கும் பவித்ரமான பணியினை பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதனை செய்ய சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவியை நாடினான். அதன்படி விஷ்ணுபிரானை சந்தித்து தனக்குள்ள அச்சத்தைப் போக்கிக் கொண்ட பிறகு தன்படைப்புத் தொழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான். அவ்வாறு திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு தோன்றினார். பின்னர் பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவனது படைப்புத் தொழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுணையாக இருப்பேன் என வாக்களித்தார். அதோடு உன் தவத்தின் வலிமையால் உன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்போது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த சேத்திரம் ஆதிசேத்திரம் என்ற பெயருடன் விளங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விளங்கட்டும் என பெருமாள் கூறி அருளினார். மேலும் நான்முகன் நாராயணனிடம், எனக்கு குருவாக இருந்து உபதேசித்ததனால் இச்சேத்திரம் குருகாசேத்திரம் என விளங்க வேண்டும் என கேட்க அப்படியே ஆகட்டும் என்றார் திருமால்.
அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிசேத்திரம் சென்று ஆதிநாதனை வழிபட நீ நினைக்கும் காரியங்கள் கைகூடும் எனவும், யாரும் காணாத எனது திருமேனியை உனக்குக் காட்டியது மட்டுமல்லாமல், எல்லோரும் பார்க்கும் வண்ணம் குருகாசேத்திரத்தில் அவதரிக்கப் போகிறேன் என்றும், கலியுகத்திலே சடகோபர் என்னும் திருப்பெயருடன் யோகியாய் அவதரித்து வடமொழி வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து, அந்த வேதமறைகளைப் படிக்கும் மாந்தர் அனைவரும் முக்தியடையும் வண்ணம் சித்தம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.
திருப்புளிய மர வரலாறு ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி மனநிறைவு பெற்று, வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆணையிட்டார். அந்த சமயத்தில், கோபத்திற்குப் பேர் போன துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தைப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். அப்போது ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து பேசி வழியனுப்பி வைத்தாலும், தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து “நீ அசையாப் பொருளாக ஆவாயாக” என சாபமிட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால், உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்சம் போல் பூலோகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. பழுக்காத புளியமரம் இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும் பழுத்ததில்லை. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுஜர் வழிபட்ட பெரும் சிறப்பு பெற்ற ஸ்தலங்களாகும். மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும். திருத்தல இறைவன் தல இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் (நின்ற திருக்கோலம்) (கிழக்கு பார்த்த திருமுக அமைப்பு) தல இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி (தாயார்களுக்கு தனித் தனி சன்னதி) தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை விமானம்: கோவிந்த விமானம் கிரகம்: குரு ஸ்தலம் தல விருட்சம்: உறங்காப்புளி.
திருக்கோவில் அமைவிடம் அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் மற்றொரு நவதிருப்பதியான ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.