திவ்யம் என்றால் மேலான என்று பொருள்படும். இந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர் மலை என்ற ஆலயம் சென்னை புறநகரில் ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது. மலையும் கிராமமும் சேர்ந்த இப்படிப்பட்ட ஒரு அழகான இடம் சென்னையில் இருப்பது ஒரு அருமையான விஷயம்.
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் எண்ணற்ற திருத்தலங்களில் எழுந்தருளி யிருந்தாலும், எட்டு திருத்தலங்கள் சுயம்வியக்த தலங்கள் – தானாகத் தோன்றிய தலங்கள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. திருவரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம், சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய தலங்களுடன் திருநீர் மலையும் சுயம்வியக்த தலமாகப் போற்றப் படுகிறது.
சென்னை நகரில் இப்படிப்பட்ட அருமையான சூழ்நிலையில் இவ்வாலயம் அமைந்திருப்பது சென்னை வாசிகள் பலருக்கு தெரியாது. இந்த மலையின் மேல் சென்றவுடன் நம்மை அறியாமலேயே ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நம்மை வந்தடையும். இவ்வாலயத்திற்கு பல்லாவரம், பம்மல் மற்றும் குன்றத்தூர் வழியாக செல்லலாம்.
மலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன. அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல சென்னையில் அனைத்து பகுதியிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே சிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை இங்கே ஓரிடத்தில் காணலாம். இங்கே நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மமூர்த்தி, கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமான், நடந்த கோலத்தில் உலகளந்த மூர்த்தியும் காணப்படுகிறார். இனி ஆலயத்தின் தல வரலாறு பார்ப்போம்.
ராம கதையை எழுதிய வால்மீகி முனிவர் இத்தலத்தில் சயனித்திருந்த அரங்கநாதரையும், இருந்த கோலத்தில் சாந்த ரூபியாக இருகரங்களுடனிருந்த நரசிம்மரையும், நடந்த கோலத்தில் திருவிக்ரமனையும் பார்த்தார். ஆமாம் அவருடைய ராமன் எங்கே? மலையை விட்டுத் துயரத்துடன் இறங்கினார்.
முனிவரின் துயரைத் துடைக்க இத்தலத்து எம்பிரான்களே வால்மீகியின் சக்கரவர்த்தித் திருமகனாகக் காட்சியளித்தனர். ரங்கநாதரே ராமனாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும், லட்சுமிதேவி ஜானகியாகவும் கருடன் அனுமான் என்று ரம்மியமான நீர் வண்ணப் பெருமாள் ரூபத்தில் காட்சி கொடுத்தனர். மூவர் நால்வராயினர். தம்முடைய திருவாலியில் உள்ள உருவத்திலேயே சாந்தமூர்த்தி நரசிம்மரை திருமங்கையாழ்வார் கண்டாராம்.
இந்த திருகோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கம் போல் சயன கோலத்தில் பெருமாளை காணலாம். மூலஸ்தானத்தின் வலது புறங்களில் நரசிம்ம பெருமாளும், வாமன அவதாரமான உலகலந்த பெருமாளும், மலையின் கீழே நீர் வண்ணப் பெருமாளும் காட்சி அளிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் பெருமாள் நின்றான், கிடந்தான், இருந்தான் மற்றும் நடந்தான் என்று நான்கு நிலைகளில் காட்சி அளிக்கிறார். நின்றான் என்பது மலையின் கீழ் உள்ள நீர்வண்ண பெருமாளையும், கிடந்தான் என்பது பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலத்திலும், நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகலந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும், இருந்தான் என்பது நரசிம்மப் பெருமாள் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும் நான்கு விதமாக பெருமாள் காட்சி அளிக்கின்றார்.
இக்கோவிலில் சென்று வழிபட்டால் நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார் கோவில், திருவாலி, திருக்குடந்தை மற்றும் திருக்கோயிலூரை வழிப்பட்ட பலனை அடையலாம் என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியை வணங்கிய பலனை இவ்வாலயத்தில் அடையலாம் என்று பூதத்தாழ்வார் குறிப்பிடுகிறார்.
இங்குள்ள ஸ்ரீரங்கநாதர் தானாக உருவாகிய சுயம்பு மூர்த்தி என்று வரலாறு கூறுகின்றது. மேலும் வால்மீகி, மார்க்கண்டேயர் மற்றும் பிருகு ரிஷிகள் தவத்திற்கு இணங்க இங்கு பெருமாள் தோன்றியாதாக வரலாறு கூறுகின்றது. இக்கோவிலின் சிறப்புகள் பிரமாண்டபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்களாம். துவாபரயுகத்தில் திருநீர்மலை மற்றும் அகோயிலம் மட்டும் இங்கு இருந்ததாம். அர்ஜுனனுக்கு நரசிம்மர் இம்மலையில் அசுவமேதயாகம் மூலம் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.
சுமார் மூன்று ஏக்கர் பரப்பில் ஆலயம் அமைந்திருக்கிறது. மலையடிவாரத்தில் நீர்வண்ணப் பெருமாளையும், திருவேங்கட நாதனையும் தரிசித்துவிட்டு, 200 படிகள் ஏறிச் சென்றால் கோயிலை அடையலாம். சுமார்
20 படிகள் ஏறியவுடன் வலப்புறமாக உள்ள சிறிய பாதையில் அருள்மிகு ஆஞ்சநேயர் சந்நிதியை நாம் தரிசிக்கலாம். கை கூப்பிய நிலையில் மேற்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
மலைக்கோயிலில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி, பிரம்மா சகிதமாக சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத் துடன் திவ்விய தரிசனம் தருகிறார். இவரை, ‘விடலரிய பெரிய பெருமாள் மெய்ப்பதங்களே’ என்று ஸ்வாமி தேசிகன் சாதித்துள்ளார். இவருடைய திருமேனி சுதை வடிவம் என்பதால், திருமஞ்சனம் இல்லாமல் சாம்பிராணி தைலம் சாற்றுதல் மட்டுமே நடைபெறுகிறது.
பெருமாளுக்கு வலப்புறத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீரங்கநாயகி தாயார் தரிசனம் தருகிறார்.மலையில் கிழக்குமுகமாக ஸ்ரீசாந்த நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். மலையின் உள் பிராகாரத்தில் அருள்மிகு உலகளந்த பெருமாள் கிழக்கு நோக்கி அருள்கிறார்.
திருநீர்மலையில் உள்ள ஒவ்வொரு பெருமாளுக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. நீர்வண்ணப் பெருமாளின் விமானம் – புஷ்பக விமானம்; ரங்கநாதர் விமானம் – ரங்க விமானம்; நரசிம்மர் விமானம் – சாந்த விமானம்; திரிவிக்கிரமர் விமானம்- பிரமாண்ட விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.
கோயில் திருக்குளமும் நீராழி மண்டபத்துடன் ஸ்வர்ண புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி என்ற நான்கு தீர்த்தங்களுடன் அமைந்திருக்கின்றன.
புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் ஸ்ரீரங்கநாதருக்கு அர்ச்சனை செய்து, ஒரு துணியில் கருங்கல் மற்றும் ஒரு ரூபாய் நாணயமும் வைத்து, ஸ்தல விருட்சமான வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இதனால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணமாகாத பெண்கள், மஞ்சள் சரடில் விரலி மஞ்சள் கோத்து வெட்பாலை மரத்தில் கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். மேலும் ஸ்ரீரங்கநாயகி தாயார் சந்நிதியில் தொடர்ந்து ஆறு வாரங்கள் பசு நெய்யினால் தரையை மெழுகி, சர்க்கரையில் கோலம் போட்டு வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ஸ்ரீரங்கநாதரை சேவித்து, ‘மந்திர ஸ்வீகாரம்’ என்னும் பூஜை செய்தால், தோஷ நிவர்த்தி பெறலாம் என்று பலனடைந்த பக்தர்கள் கூறுகின்றார்கள்.