தலபுராணம்: திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். தீர்த்தம்: பிரஞ்ஞா சரசு எனப்படும் பூண்சுனைத் தீர்த்தம். விமானம் புருசோத்தம விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
பஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்டக் கோவிலாகக் கேரள மாநிலம் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் அமைந்திருக்கிறது.
மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்கு ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அதன்படி பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.
பீமனும் அப்படியேச் செய்தான். துரோணர் உண்மையறியாமல், போரில் தன் மகன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டனரே என்று நினைத்துக் கவலையடைந்தார். அந்த வேளையில் துரோணரைப் பாண்டவர்கள் எளிதில் வீழ்த்தி விட்டனர். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், பீமனுக்குத் தான் சொன்ன பொய்யால்தான் துரோணர் மரணமடைய நேரிட்டது என்கிற குற்ற உணர்வு இருந்து கொண்டேயிருந்தது.
பீமன், அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீண்டு மன அமைதி பெறவும், தான் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கவும் வேண்டி ஒரு பழமையான விஷ்ணு கோவிலைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தார். அப்போது அங்கிருந்த பழமையான மகாவிஷ்ணு கோவில் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அதே நேரத்தில் அந்தக் கோவில் அமைந்த வரலாறும், அவன் கண்முன்பாக காட்சியாகத் தெரிந்தது.
சூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தியின் மகன் விருட்சதர்பி தவறான வழியில் ஆட்சி செய்தான். அதனால் அந்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ரிஷிகளுக்குத் தானமளித்தால் நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் நீங்கும் என அறிந்த மன்னன், அத்திரி, வசிஷ்டர், காச்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் மற்றும் ஜமதக்னி எனும் சப்தரிஷிகளை வரவழைத்து அவர்களுக்குச் செல்வத்தைத் தானமாக அளித்தான்.
சப்தரிஷிகள், தீய வழியில் சேர்த்த செல்வத்தைத் தானமாக ஏற்க இயலாது என்று சொல்லி அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், அந்த மன்னன் ரிஷிகளுக்குத் தெரியாமல் எப்படியாவது சிறிது செல்வத்தைக் கொடுத்து, அதன் மூலம் நற்பலனை அடைந்து விட முயன்றான். ஆனால், அவன் செய்த முயற்சி கள் அனைத்தும் பலனளிக்காமல் போனது.
அதனால் கோபமடைந்த மன்னன் சப்தரிஷி களைக் கொல்வதென்று முடிவு செய்தான். அதற்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தான். அந்த வேள்வியில் தோன்றிய ‘கிருத்தியை’ எனும் அரக்கியிடம் சப்தரிஷி களைக் கொல்லும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தான்.
அதனையறிந்த சப்தரிஷிகள் அரக்கியிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டியபடி ஓடினர். உடனே மகாவிஷ்ணு இந்திரனை அழைத்து, அந்த அரக்கியை அழித்து சப்தரிஷிகளைக் காக்கும்படிச் சொன்னார். இந்திரன் புலியாக உருவம் மாறி அரக்கியை அழித்தான்.
சப்தரிஷிகள் மகாவிஷ்ணுவிற்கு நன்றி தெரிவித்து வணங்கினர். அப்போது அவர்கள் முன்பு காட்சியளித்த மகாவிஷ்ணுவிடம் சப்தரிஷிகள், தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருள வேண்டினர். அவர்களது வேண்டு கோளை ஏற்று மகாவிஷ்ணுவும் அங்கு கோவில் கொண்டார். அந்தக் கோவிலே பராமரிப்பின்றி பழமையடைந்து போனது.
பழமையான அந்தக் கோவிலைப் புதுப்பித்த பீமன், மகாவிஷ்ணுவை வழிபட்டு மன அமைதி யடைந்தான் என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.
கோவில் அமைப்பு :
தரை மட்டத்தில் இருந்து சற்று உயரமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள இறைவன் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி, கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருக் கிறார். இங்குள்ள இறைவன் ‘மாயபிரான்’ என்றும், இறைவி ‘பொற்கொடி நாச்சியார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திர நாளிலும், விஷ்ணுவுக்குரிய பிற சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி தனு (மார்கழி) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா, பத்தாம் நாளில் நடைபெறும் ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. இதே போல் மகரம் (தை) மாதம் முதல் நாளில் இக்கோவிலில் காவடியாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோவிலில் வழிபடுபவர்களுக்கு எதிரிகள் மறைமுகமாகச் செய்யும் அனைத்துத் தீயசெயல்களும் முறியடிக்கப்பட்டு வெற்றிகள் வந்தடையும் என்கிறார்கள். மேலும் ஒருவர் அறியாமல் செய்த அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.
ஆலய சிறப்புகள் :
- இக்கோவில் சப்தரிஷிகளுக்கு மகாவிஷ்ணு மாயப்பிரானாகக் காட்சியளித்த தலமாகும்.
- பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட ஐந்து கோவில்களில் (அஞ்சம் பலம்) ஒன்றாக இருக்கிறது.
- பீமனால் புதுப்பிக்கப்பட்டதால் இக்கோவில் ‘பீமன் கோவில்’ (பீமச் சேத்திரம்) என்றும் அழைக்கப்படுகிறது.
- இத்தல இறைவனைத் திருப்புலியூரப்பன் என்றும் அழைக்கின்றனர்.
- இந்த ஆலயம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் போன்றவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கிறது.
- பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கதாயுதம் ஒன்று இக்கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.
- இக்கோவிலின் முன்பகுதியிலுள்ள கொடிமரம் பிற கோவில்களை விட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் செங்கணூரில் இருந்து மேற்குப் பக்கமாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புலியூர். கோட்டயம் நகரில் இருந்து 38 கிலோமீட்டர் அல்லது திருவல்லா நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் பயணித்துச் செங்கணூர் சென்று இத்தலத்தினைச் சென்றடையலாம். செங்கணூரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிறிய ஊரான திருப்புலியூர் செங்கணூரில் இருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் மாயப்பிரான். நின்ற திருக்கோலத்தில் பகவான் அருள் பாலிக்கிறார். தாயார் பொற்கொடி நாச்சியார். தீர்த்தம் பரஜ்நாஸரஸ். பூஞ்சுனை தீர்த்தம். விமானம் புருஷோத்தம விமானம். ஸப்த ரிஷிகளுக்கு திருமால் நேரடியாக தரிசனம் கொடுத்த இடம்.
இந்தக் கோவில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. சிபியின் குமாரன் வ்ருஷாதர்பி இங்கு அரசாண்ட பொழுது நிறைய பாவங்கள் ஏற்பட்டது. இந்தப் பாவத்தை தொலைக்க என்ன செய்யலாம் என்று அரசன் யோசித்தான். அப்பொழுது அங்கு சப்தரிஷிகள் வந்திருப்பதை அறிந்து அவர்களுக்கு தானம் செய்ய உத்தரவிட்டான்.
அரசனோ மகாபாவி, அவன் கையால் தானம் வாங்க கூடாது என்று சப்தரிஷிகள் முடிவு எடுத்து தானம் வாங்க மறுத்துவிட்டனர். இதை உணர்ந்த அரசன், தனது தானத்தைத் கலந்த பழங்களாக வேறு விதமாக அனுப்பினார். சப்த ரிஷிகளுக்கு இது ஞான திருஷ்டி மூலம் தெரிந்துவிட்டது. மீண்டும் மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட அரசன், ஒரு பெண் மூலம் சப்தரிஷிகளை கொல்ல முயற்சித்தான். இதனை உணர்ந்த சப்தரிஷிகள் திருமாலிடம் பிரார்த்தனை செய்ய, திருமால் அந்தக் கொடிய பெண்ணை கொன்று சப்தரிஷிகளை காப்பாற்றி சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாக வரலாறு! நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இந்த கோவிலுக்கு மங்களாசனம் செய்திருக்கிறார்கள்.
நல்லவர்களாக இருப்பவர்களுக்கும், தெய்வ வளத்தைத் தவிர மற்ற பலம் எதுவும் இல்லாத சாமானியர்களுக்கும், கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். இந்த கட்டங்களை எப்போது, யாரால் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. எல்லோரும் தன்னை கைவிட்டு விட்டு விட்டால் பகவானை தஞ்சம் அடைய வேண்டிய இடம் தான் இந்த திருப்புலியூர் மாயப்பிரான் திருக்கோயில். பகவான் நிச்சயம் அவர்களது துன்பங்களை போக்குவதோடு சொர்க்கத்திற்கும் இடம் கொடுத்து அருள்பாலிப்பார்.
பகவானை நம்பி விட்டால் போதும். ஆனால் பகவானை நம்பாமல் பொன், பொருள் ஆகியவற்றை தானம் கொடுக்காவிட்டால் பாவம் கழியுமா? என்பதற்கான கேள்விக்கு பதில் கிடைக்கக்கூடிய புண்ணியத் தலங்களில் திருப்புலியூரும் ஒன்று. யார் யாருக்கு தானம் கொடுத்து விட முடியாது என்கின்ற உண்மையையும், எப்படி தானம் கொடுத்தாலும் அது வீண்தான் என்பதையும் அனுபவபூர்வமாக எடுத்துக்காட்டும் அருமையான ஸ்தலம் திருப்புலியூர்.
இந்த திவ்ய தேசத்தில் கல்யாண குணங்கள் அதிகம். மூன்று உலகங்களையும் பிரளய காலத்தில் உட்கொண்டு, படைப்புக் காலத்தில் வெளியிட்ட எம்பெருமானின் திருப்பெயர்களை அல்லாது வேறு பேச்சு இங்கே பேச மனம் வருமோ? திருச்செங்குன்றூர்-மாவலிக்காரா பாதையில், ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத் தலம். திருப்புலியூர் என்று கேட்டுச் செல்வதைவிட, குட்டநாடு என்று விசாரித்தால் விரைவில் வழி கிடைக்கும்.