பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரைக் கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும்.
மகாபலி சக்ரவர்த்தி இந்த ஸ்தலத்தை ஆண்டதாகவும், ஸ்ரீமன் நாராயணன் எடுத்த அவதாரங்களில் ஒன்றான வாமநாரில் இருந்து அவருக்கு கிடைத்த வரத்தின் படி, இந்த ஸ்தலம் “மகாபலிபுரம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்தலம் பற்றிய கதைகளில் இதுவும் ஒன்று.
மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோவில். இது 108 வைணவ திருத்தலங்களில் 63வது தலமாகும். திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார்.
படுத்த நிலையில் பெருமாள் காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும்.
இந்த ஆலயத்தில் ஸ்தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு.
மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7-வது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர்.
இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்’ என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் முதலையாக இருப்பாய்’ என்று சாபம் கொடுத்து விடுகின்றனர். அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார்.குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான்.
அதற்கு முனிவர், நீ மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு’ என்று கேட்க, அவனும் பறித்து கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்து கொண்டிருந்த ஸ்தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார்.
அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும் என்றார்.
மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார். பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார். திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார்
இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.
இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள்(தமிழில் தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது. இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப் பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.
முன்னோர் சாபம், முனிவர் சாபம், விலங்குகள் சாபம் என எத்தனையோ சாபங்களும், தோஷங்களும் மனிதர்களை பாதிக்கின்றன. இதே போல கடன் பிரச்சினையும் மனிதர்களை கலங்க வைக்கும், எத்தனையோ பேருக்கு மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது கடன். இந்த இரண்டு சிக்கல்களையும் தீர்க்கும் இந்த ஆலயம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது.