இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
வழிபட்டோர் : திருமால், திருமகள், இராமர், மன்மதன், முசுகுந்த சக்கரவர்த்தி.

தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும் பிரதானமானதுமாகும்.திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்), திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல் மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில் கொண்டுள்ளார். பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். ஒன்பது கிரகங்களும் தியாகராஜ சுவாமிக்கு கட்டுப்பட்டு ஓரே வரிசையில் தென் திசையில் தியாகராஜசுவாமி சன்னதி நோக்கி அமைந்துள்ளதை இத்திருத்தலத்தில் மட்டும் தான் காணலாம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம். கமலாம்பிகை சந்நிதி: கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும்,பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. நிலோத்பலாம்பாள் சந்நிதி: இங்கே அம்பாள் இரண்டு கரத்துடன் ஆதிசக்தியாக காட்சி தருகிறார். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புடன் அம்பாள் காணப்படுகிறார். அம்பாளுக்கு இடது புறமாக ஒரு பெண் நின்ற நிலையில் ஒரு சிறுவனை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள். அவன் தலை மீது அம்பாள் தன் இடது கையை படிமானமாக வைத்துக் கொண்டிருப்பது போல, ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவம் வேறுஎங்கும் காண இயலாதது, கருவறையில் பள்ளியறையும் அமைந்து தனித்தன்மை பெற்று விளங்குகிறது. திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.
கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.
சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.
விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்

திருவாரூர்க் கோயிலுக்குள் சென்று விட்டால், குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியேயில்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கும் சிறப்பை உடைய தலம்.
சனீஸ்வரரால் துயரப்பட்ட நள மகாராஜன் இந்த கமலாலய தீர்த்தத்தில் குளித்தபின்பு சனீஸ்வரன் உடைய தாக்கம் குறைந்து சனிபகவானுடைய பார்வையில் இருந்து விடுதலை கிடைத்ததாக ஐதீகம். இதனால் சனிதிசை உடைய மக்கள் இந்த தீர்த்தத்தில் குளித்தால் அவர்களது சனிதிசை கஷ்டங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆகையால் நள மகாராஜன் இந்த கமலாலய தீர்த்தத்தில் குளித்து அம்பாள் கமலாம்பிகை வழிபட்டததால் சனி திசையில் இருந்து விமோசனம் பெற்றார்.

நள மகாராஜன் சனி திசை முடிந்து, திருக்கொள்ளிக்காடு, திருக்கொடியலூர், இந்த தளங்களில் நீராடிய பிறகு வந்து சேருகிறார். அப்போது அங்குள்ள ஸ்வர்ண தீர்த்தம் என்ற குளத்தருகில் அமர்ந்து இருக்கிறார். அந்த குளத்தில் ஒரு கருமை நிறமான காகம் நீராடுகிறது குளிக்கிறது, அது தண்ணீரை விட்டு வெளியே வரும் பொழுது பொன் நிறமாக மாறி வருகிறது. இதை பார்த்த நள மகராஜன் தானும் அந்த தீர்த்தத்தில் குளித்தால் தனக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்பி அந்த தீர்த்தத்தில் குளிக்கிறார். அதன்பிறகு அவரை சனீஸ்வர பகவான் விட்டுவிலகி அவருக்கே உரித்தான மன்னருடைய தோற்றத்தையும் முன்பை விட பல மடங்கு அழகையும் கொடுக்கிறார். இந்த தளத்தில் சனீஸ்வரனை வணங்கிய பின்பே சிவனை வணங்க வேண்டும் இங்கு நவகிரகங்கள் கிடையாது சனீஸ்வரன் மட்டும் தனியாக அருள்பாலிக்கிறார் ஆகவே இத்தலம் சனீஸ்வர பகவானுக்கு உயர்ந்த தலமாக கருதப்படுகிறது.அஷ்டம சனி, அர்த்தாஷ்டமசனி, கண்டச்சனி,விரயச் சனி, ஏழரைசனி, பொங்கு சனி, மரணச்சனி, இந்த வகையில் எந்த சனி திசையும் இங்கு வந்த பிறகே முடிவுக்கு வருகிறது.